Liger Review: சூப்பர் மொக்கை படம்.. எதுக்கு விஜய் தேவரகொண்டாவுக்கு அவ்வளவு பில்டப்.. லைகர் விமர்சனம்

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன்

இசை: சுனில் காஷ்யப், விக்ரம் மன்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி

இயக்கம்: பூரி ஜெகநாத்

Rating:
2.5/5

சென்னை: நடிகை சார்மி, கரண் ஜோஹர், பூரி ஜெகநாத் உள்ளிட்ட பலர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்து பூரி ஜெகநாத் இயக்கியுள்ள லைகர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாலா கிராஸ் ப்ரீட் என லைகர் படத்துக்கு அர்த்தம் சொல்ல மெனக்கெட்ட அளவுக்கு இயக்குநர் திரைக்கதைக்கு மெனக்கெட்டிருக்கலாம். லைகர் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

4 மணி ஷோ

சமீபத்தில் வெளியான கார்த்தியின் கொம்பன், தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களே 8 மணிக்குத்தான் போட்டாங்க.. 4 மணிக்கே விஜய் தேவரகொண்டாவின் டப்பிங் படம் வெளியாகி இருக்கே மிரட்டப் போகிறது என போய் உட்கார்ந்த ரசிகர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விட்டது லைகர் திரைப்படம் என்று தான் சொல்ல வேண்டும்.

என்ன கதை

என்ன கதை

சின்ன வயசில் இருந்தே மைக் டைசனை குருவாக எண்ணி பார்த்து மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியனாக மாற வேண்டும் என நினைக்கும் ஹீரோ, கடைசியில் அந்த மைக் டைசனே டானாக மாறி தனது காதலியை கடத்தி வைக்க அவளை மீட்க குருநாதர் மைக் டைசனை அடித்துப் போட்டு அவருடன் செல்ஃபி எடுப்பது தான் லைகர் படத்தின் கதை.

திரைக்கதையில் சொதப்பல்

திரைக்கதையில் சொதப்பல்

கதை எப்படி இருந்தால் என்ன, திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால் பழைய படத்தை திருப்பி எடுத்து வைத்தாலும் பார்க்க ரசிகர்கள் ரெடியாக இருக்கும் போது, பழைய கதையை இன்னும் பழசாகத்தான் எடுத்து வைப்பேன் என இயக்குநர் பூரி ஜெகநாத் அடம்பிடித்தது தான் லைகர் படத்திற்கு வந்த பெரிய சிக்கல்.

பில்டப் ரம்யா கிருஷ்ணன்

பில்டப் ரம்யா கிருஷ்ணன்

எம் குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி படத்தில் நதியா ஒரே ஒரு காட்சியில் எனக்கொரு மகன் இருக்கான்டா சிங்கம் மாதிரின்னு ஜெயம் ரவிக்கு பில்டப் கொடுப்பார். அதே விஷயத்தை படம் மூலம் சிங்கத்துக்கு புலிக்கும் பிறந்த மகன் டா இவன், சூறாவளி டா, காட்டாரு டா, மோட்டாரு டா என ஃபாரின் வில்லன் வரை இப்படியே பில்டப் கொடுத்து எரிச்சலூட்டுகிறார். லைகர் படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் படத்தில் பார்த்து யூஸ் பண்ணுங்க நெல்சன் என தியேட்டரிலேயே கமெண்ட் அடிக்கின்றனர்.

விஜய் தேவரகொண்டா வெறித்தனம்

விஜய் தேவரகொண்டா வெறித்தனம்

படத்தின் பிளஸ் என்னவென்றால் விஜய் தேவரகொண்டா எம்எம்ஏ ஃபைட்டராகவே தனது உடல் தோற்றத்தை மாற்றி இருப்பதும், ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தி இருப்பதும் தான். ஆனால், திக்குவாய் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. காதல் காட்சிகள் தான் படத்திற்கு பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது.

அனன்யா பாண்டே எப்படி

அனன்யா பாண்டே எப்படி

பாலிவட்டின் இளம் நடிகை அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவை பார்த்து மயங்கி துரத்தி துரத்தி காதலிப்பதும், பின்னர் அவருக்கு திக்குவாய் என தெரிந்ததும் விலகி செல்வதும், இந்தியாவில் அவரது அண்ணனை அடித்து ஜெயித்ததும் மீண்டும் ரகசியமாக காதல் கொள்வதும் என வராத நடிப்பை வா வான்னு கூப்பிட்டு நடித்த மாதிரி நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் தாராளம் காட்டி உள்ளார்.

பிளஸ்

பிளஸ்

விஜய் தேவரகொண்டா அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல மாற்றிக் கொண்டது பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பு மட்டுமே படம் முழுக்க பிரெடிக்டபிளான காட்சிகளை கூட பார்க்க வைக்கிறது. விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு, தயாரிப்பு பணிகளின் பிரம்மாண்டம், இசையமைப்பாளர்களின் பின்னணி இசை, மைக் டைசன் வரும் அந்த கடைசி போர்ஷன் என படத்துக்கு சில பிளஸ்கள் உள்ளன. கிளைமேக்ஸில் ஜாக்கி சானின் ஆர்மர் ஆஃப் தி காட் படத்தில் வருவது போல ஒரு லேடீஸ் ஃபைட் வருகிறது. மற்ற ரிங் ஃபைட்டுகளுக்கு அந்த ஃபைட் பரவாயில்லை.

மைனஸ்

மைனஸ்

இயக்குநர் பூரி ஜெகநாத்தின் கதை மற்றும் திரைக்கதை படத்திற்கு பெரிய மைனஸ் ஆக மாறிவிட்டது. இதற்கு பட்டாசு மற்றும் சிங்கம் புலி படத்தையே மீண்டும் ஒரு முறை பார்த்து விடலாம் என ரசிகர்கள் தியேட்டரில் கிண்டல் அடித்து வருகின்றனர். லவ் போர்ஷன் வைக்கிறேன் என்கிற பெயரில் ஒட்டுமொத்த படத்தையும் விஜய் தேவரகொண்டாவின் கடின உழைப்பையும் வீணடித்து விட்டார் இயக்குநர். நீங்க விஜய் தேவரகொண்டாவோட பெரிய ஃபேனா இருந்தா படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.