மனித உடலில் இரண்டு சிறுநீரங்கள் இருப்பது இயற்கை. பிறவியிலேயே அல்லது சிறுநீரக தானம் கொடுத்தவர்கள் ஒரு சிறுநீரகத்துடன் வாழ்வதையும் கேள்விப்பட்டிருப்போம். விசித்திரமாக ஒரு நபர், மூன்று சிறுநீரகங்களுடன் வாழ்ந்து வருகிறார். கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுஷில் குப்தாவுக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது அவரது 50-வது வயதில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஊடக நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “2020-ம் ஆண்டு பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் சென்றபோது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது அப்போது உடலில் மூன்று சிறுநீரகங்கள் இருப்பது தெரிய வந்தது. அப்போதும் அந்த விஷயத்தை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்தேன்.
அப்போது மீண்டும் மூன்று சிறுநீரகங்கள் இருப்பது பரிசோதனை முடிவில் உறுதியானது. தற்போது எனக்கு 52 வயது ஆகிறது. இப்போது வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் நலமாக இருக்கிறேன். நான் ஏற்கெனவே என் இரு கண்களையும் தானம் செய்வதாக உறுதுளித்துள்ளேன். யாருக்காவது சிறுநீரகம் தேவைப்பட்டால் என்னால் தானம் செய்ய முடிந்தால் கண்டிப்பாக தானம் செய்வேன்” என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள்,”மூன்று சிறுநீரகங்கள் மனிதர்களுக்கு இருப்பது மிகவும் அரிதானது. இதனால் எந்தப் பிரச்னையும் வராது. அனைத்து மனிதர்களையும் போலவே அவரும் இயல்பான வாழ்க்கையை வாழலாம். ஏதாவது உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி முன்னெச்சரிக்கை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறுநீரகத்தை வைத்துக்கொண்டும்கூட ஒரு மனிதர் ஆரோக்கியமாக வாழ முடியும் என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இயற்கையின் விந்தையை யாரால் கணிக்க முடியும்!