“அடிச்சது ரூ.2.5 கோடி… ஆதார் எடுத்துவந்தா உங்களுக்கு ரூ.2,500!"- ஊராட்சி மன்றத்தை அதிரவைத்த தபால்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவுக்குட்பட்ட மலைப்பட்டி ஊராட்சி மக்கள் சிலருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு மொட்டைத் தபால் வந்திருக்கிறது. அந்தத் தபாலில், மலைப்பட்டி ஊராட்சி மன்றம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தபால் விவகாரம் மலைப்பட்டி ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடந்தது என்னவென்பதை அறிய ஊராட்சி மன்றப் பெண் தலைவர் குணசுதாவைச் சந்தித்துப் பேசினோம்.

“என் கணவர் பெயர் சுதாகர். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவள். நாங்கள் இருவரும் கலப்புத் திருமணம் செய்தவர்கள். மலைப்பட்டி, கூத்திப்பாறை ஆகிய இரண்டு கிராமங்களும் சேர்ந்ததுதான் மலைப்பட்டி ஊராட்சி. இந்த இரண்டு கிராமங்களுக்கும் சேர்த்து ஒன்பது கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 6,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருக்குமான பிரதிநிதியாகத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் நான் செயலாற்றிவருகிறேன்.

ஊராட்சி பழைய கட்டடம்

நான் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்களின் நலனுக்காக சாலை அமைத்தல், வாறுகால் சீர்செய்தல், மின்விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல திட்டங்களை முடித்துக் கொடுத்திருக்கிறேன். பட்டியலினத்தைச் சேர்ந்த நான் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றது பிடிக்காமல், சிலர் ஆரம்பத்தில் தொல்லை கொடுத்தனர். ஃபேஸ்புக்கில், `மலைப்பட்டி அரிச்சந்திரர்கள்’ எனும் பெயரில் கணக்கு தொடங்கி, அதில் நாங்கள் பதிவிடுவதுபோல, மர்மநபர்கள் ஊராட்சி மன்றப் பணிகள் குறித்து அவதூறு பரப்பினார்கள். இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும், சைபர் க்ரைம் போலீஸிலும் நாங்கள் புகார் கொடுத்தோம்.

போலி கணக்கு

இதைத் தெரிந்துகொண்டவர்கள் உடனடியாக அந்த போலியான ஃபேஸ்புக் கணக்கை நீக்கிவிட்டனர். அதனால் அவதூறு பரப்பியவர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல்போனது. அதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றப் பணிகளில் குறுக்கிடுவது, டெண்டர் தொடர்பான கடிதப் போக்குவரத்தைத் தடுப்பது உள்ளிட்ட சிறு சிறு பிரச்னைகளைச் செய்தனர். ஆனால் அதையெல்லாம் உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சரிசெய்தோம். இப்போதுவரை நேரடியாக மோதாமல், மறைமுகமாக நிறைய தொல்லைகள் கொடுத்துவருகின்றனர்.

சமீபத்தில், எங்கள் ஊரைச் சேர்ந்த 40 பேருக்கு ஊராட்சி மன்றத்தின் அட்ரஸிலிருந்து மொட்டைத் தபால் வந்தது. அந்தத் தபாலில், `பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்களாகிய உங்கள் ஒத்துழைப்போடு இதுவரை 2.5 கோடி ரூபாய் கொள்ளையடிச்சிருக்கோம். இந்தப் பணத்தை நாங்க மட்டும் தனியா அனுபவிக்காம, ஊர் மக்களாகிய உங்களுக்கும் தலா ரூ.2,500 பங்கு தரலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். அதனால், கடிதம் கிடைச்சவங்க இந்தத் தகவலை மத்தவங்களுக்கும் சொல்லிடுங்க. மறக்காம உங்களோட ஆதார் கார்டு, வங்கிப் புத்தகத்தை எடுத்துட்டு வந்து ஊராட்சில பதிவு செய்யுங்க. இந்த முறை 2,500 ரூபாய் கொடுப்போம்.

இனி அடுத்தடுத்து மாதம்தோறும் 500 ரூபாய் உங்கள் வங்கி அக்கவுன்ட்டுக்கே அனுப்பிருவோம்’னு அச்சடிக்கப்பட்டுருக்கு. இப்படியொரு மொட்டைத் தபாலை யார் போஸ்ட் செய்தார்கள்… எதற்காக ஊராட்சி மன்றம் பெயரில் இப்படி அவதூறு பரப்புகின்றனர்… என்மேல் அவர்களுக்கு அப்படி என்னதான் காழ்புணர்ச்சியென்று தெரியவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த நான் ஊராட்சித் தலைவராகச் செயல்படுவது பிடிக்காத நபர்கள், இந்த மொட்டைத் தபாலை அனுப்பியிருப்பார்களா அல்லது என்மீது கெட்ட அபிமானத்தை பரப்பும்விதமாக வேறு யாரேனும் இதைச் செய்தார்களா என்பது தெரியவில்லை.

கடிதம்

ஏனென்றால், கடந்த ஆட்சி நிர்வாகத்தில் நடந்த தவறுகள்‌ இந்த முறை நடக்கக் கூடாதென கவனமாகச் செயல்படுறோம். பழைய கான்ட்ராக்ட் ஆட்களுக்கு பதிலாக புது ஆட்களுக்கு வாய்ப்பு கொடுத்து பணி செய்கிறோம்‌. பல வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறோம். இதனால் வெறுப்பானவர்கள் என்னை பழிவாங்கும் நோக்கில் இந்தத் தபாலை அனுப்பியிருப்பார்கள் எனச் சந்தேகம் இருக்கிறது. இதில் ஒரு விஷயத்தை கவனிக்கணும். மொட்டைத் தபால் வந்த எல்லாருக்குமே ஊரில் அவங்களுக்குச் சொல்லப்படுகிற அடைமொழி பெயரோடு சேர்த்துத்தான் தபால் வந்திருக்கு. அடைமொழி பெயர் எதுவுமே ரெக்கார்டில் வராது.

கடிதம்

எனவே, இந்த மொட்டைத் தபாலை ஊரைச் சேர்ந்த யாரோதான் அனுப்பியிருக்க வேண்டும். இதுல வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மொட்டைத் தபால் விஷயத்தில் உண்மை எது, பொய் எதுவென தெரிவதற்கு முன்னாடியே எங்கள் ஊர் மக்கள் சிலபேர் பஞ்சாயத்து ஆபிஸுக்கு போன்செய்து, ‘ஏம்ப்பா… பணம் குடுக்கறது உண்மையா… பணம் வாங்க எப்ப வரணும்’னு வெகுளியா கேட்குறாங்க. இந்தச் சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார் சங்கடம் தாளாத குரலில்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். “ஊராட்சி மன்றம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் பற்றி விசாரணை நடத்திவருகிறோம். மேலும், சாதிரீதியான மோட்டிவில் இதைச் செய்தார்களா என்பதையும் கவனத்தில் எடுத்து விசாரிக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.