“அண்ணன் எடப்பாடி, அவரின் சமூகம் சார்ந்தே இயங்குகிறார்…” – போட்டுத்தாக்கும் எம்.பி தர்மர்

அ.தி.மு.க-வில் தற்போது நடந்துவரும் பிரச்னைகளின் முக்கியப்புள்ளி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் தன் பங்கு ஒதுக்கீட்டைப் பிடிவாதமாகக் கேட்டு, முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் தர்மருக்குக் கொடுத்ததுதான் இருவருக்கிடையிலும் புயலைக் கிளப்பியது என்கிறார்கள். இதையடுத்து நடந்த பொதுக்குழுக் கூட்டம் முதல் தலைமை அலுவலக வன்முறை, நீதிமன்ற வழக்கு, எடப்பாடிக்கு ஓ.பி.எஸ் விட்ட தூது வரையிலான கேள்விகளை எம்.பி தர்மரிடம் முன்வைத்தோம்…

“ஒன்றியச் செயலாளராக இருந்த நீங்கள் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்படுவீர்கள் என்று நினைத்தீர்களா?”

“ஒரு சாதாரண தொண்டனும் மேலே வரலாம் என்பது அ.தி.மு.க-வில் மட்டும்தான் நடக்கும். அதற்கு நானும் இப்போது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறேன். அம்மா காலத்தில் நான் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்து பணியாற்றியிருக்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்கும் தொண்டர்களை அம்மாவின் பாணியில், ஓ.பி.எஸ் ஐயா என்னை எம்.பி-யாக்கியிருக்கிறார். ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“உங்கள் தேர்வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு இடையே ஏற்பட்ட முரண்தான் ஒற்றைத் தலைமை நகர்வுக்கு காரணமாக அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறதே?”

” அப்படியெல்லாம் இல்லை. நான் கட்சி பதவி வேண்டுமென்றோ, தேர்தலில் நிற்க சீட் வேண்டுமென்றோ எப்போதும் கேட்டது கிடையாது. இரண்டு ராஜ்யசபா எம்.பி சீட்டில், ஒன்று தென் மாவட்டத்துக்கென்று முடிவானது. கிருத்திகா முனியசாமி இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருக்கிறார். அதேபோல சீட் கேட்டவர்களைவிட நான்தான் கட்சியில் சீனியர். பி.ஏ படித்து இருக்கிறேன். அதனால்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னார்கள். நான் தேர்வாகி இருப்பதாக எடப்பாடி அண்ணன் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, என்னுடைய தேர்வுதான் எல்லா பிரச்னைக்கும் தொடக்கம் என்பதை ஏற்க முடியாது.”

“ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பிறகு ஓ.பி.எஸ், சமூக ரீதியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?”

“அவர் எப்போதும் சமூகம் சார்ந்து செயல்பட்டது இல்லை. முதல்வராக இருந்தபோதுகூட அவர் அப்படி செயல்படவில்லை. சமூக ரீதியான கூட்டங்களுக்குக்கூட அவர் கலந்து கொள்ள மாட்டார். அவர் எல்லாருக்குமான தலைவராகவே இருந்தார். ஆனால், எடப்பாடி அண்ணன் அவரின் சமூகம் சார்ந்தே இயங்குகிறார்”.

“சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ்-ஆல் தென்மாவட்டங்களில் அதிக இடங்களை கைபற்ற முடியவில்லையே?”

“மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 10.5 சதவிகிதம் வன்னியர்களுக்கு வழங்க எடப்பாடி முடிவு செய்தார். அப்போது, தென்மாவட்டங்களில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஓ.பி.எஸ் எச்சரித்தார் . ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதன்காரணமாகவே, சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு வாக்கு கிடைக்கவில்லை. பல ஊர்களில் எங்களால் பிரசாரத்துக்கே செல்ல முடியவில்லை. இதைதான் அவர்களும் எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அதேபோலவே, ஓ.பி.எஸ்-ஸால் தென்மாவட்டங்களில்கூட வேட்பாளர்களை வெற்றி பெறவைக்க முடியவில்லை என்று கட்சிக்குள் தொடர்ந்து பேசி, ஓ.பி.எஸ்-ஸுன்செல்வாக்கை குறைக்க முயன்றனர். ஒற்றைத் தலைமை விவகாரம் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருக்கிறது.”

“அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நீங்கள் முக்கியப்புள்ளியாக செயல்பட்டதாக கூறப்படுகிறதே?”

” (சிரிக்கிறார்)… தலைமை அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் செல்ல இருப்பதாக கூறியதும், நாடாளுமன்றத்தில் பதவியேற்ற உடனே சென்னைக்கு திரும்பினேன். வழக்கம்போல அலுவலக சாலையில் நடந்து செல்லும்போதே, அங்கிருந்தவர்கள் என்னுடன் வந்தர்களை ஆயுதங்களுடன் தாக்கினர். அவர்களிடமிருந்து ஓ.பி.எஸ்-ஸை பாதுகாப்பாக அலுவலகம் கொண்டு செல்வதே எங்களுக்கு போராட்டமாகிவிட்டது. எல்லாமே அவர்கள் செய்துவிட்டு, எங்கள் மீது பழிபோடுகிறார்கள்.”

” ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்களை எடப்பாடி கட்சியில் இருந்து நீக்கியபோதும், உங்களை மட்டும் ஏன் நீக்கவில்லை?”

“மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற அ.தி.மு.க-க்கு ஆறு இடம் வேண்டும். ஆனால், என்னையும் சேர்த்து தற்போது நான்கு பேர்தான் இருக்கிறோம். என்னையும் கட்சியில் இருந்து நீக்கியிருந்தால், கட்சிக்கு அங்கீகாரம் இல்லாமல் போயிருக்கும். அதேபோல, மாவட்ட செயலாளர்களைத்தான் கட்சியில் இருந்து நீக்கினார்கள். நான் ஒன்றிய செயலாளர்தான். இந்த காரணங்களால்தான் என்னை நீக்கவில்லை என்று கருதுகிறேன்.”

“ஒற்றைத் தலைமை விவகாரத்துக்குப் பிறகு எடப்பாடி தரப்பில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?”

“அம்மாவுக்குப் பின்னர் நான் ஓ.பி.எஸ்-ஸுக்கு விசுவாசமாக இருக்கிறேன். என்னை அழைத்தாலும் நான் அவர்கள் பக்கம் போக மாட்டேன். இது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால், என்னை அவர்கள் அழைக்கவில்லை.”

“பதவிக்காகத்தான் ஓபிஎஸ் எல்லாம் செய்கிறார் என்று எடப்பாடி நேரடியாகவே கூறுகிறாரே?”

“முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லா பதவிகளையும் கட்சியின் நலனுக்காக தூக்கி எறிந்தவர் ஓ.பி.எஸ். ஆனால், கட்சிக்குள் இவ்வளவு பிரச்னை வருவதற்கு எடப்பாடியின் பதவி வெறிதான் காரணம். தற்போது வழக்கில் வெற்றி பெற்றும், இணைந்து செயல்படலாம் என்று பெருந்தன்மையுடன் அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ்-ஸை அவர்கள் தவறாக பேசுகிறார்கள்.”

“தன்னால் தனியாக கட்சியை வழிநடத்த முடியாது என்பதால்தான், எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கிறாரா ஓ.பி.எஸ்?”

“அவரால் முடியாதது என்று எதுவுமில்லை. தர்மயுத்தம் நடந்த போதும், தற்போதும் பெரும்படையை, தனிநபராக எதிர்த்து நின்று அதில் வெற்றியும் பெற்றியிருக்கிறாரே… தற்போது எங்களிடம் எடப்பாடி தரப்பில் இருந்து பல மாவட்டச் செயலாளர்கள் பேசுகிறார்கள். இன்னும் ஒரு மாதத்துக்குள் எங்கள் பக்கம் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும் வந்துவிடுவார்கள்.”

“சசிகலா, தினகரனுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ், இப்போது அவர்களுக்கு அழைப்புவிடுவது முரணாக இல்லையா?”

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அ.ம.மு.க தனித்து நின்றதால்தான் வாக்குகள் சிதறி, பல இடங்களில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 65 சதவிகித வாக்காளர்கள்தான் கட்சியை சார்ந்து இருக்கிறார்கள். மீதமுள்ள 35 சதவிகித வாக்காளர்கள்தான் வெற்றியை உறுதி செய்கிறார்கள். அதை பெறுவதற்கு பலமான அ.தி.மு.க தேவை. அதை மனதில் வைத்துத்தான் இணைந்து செயல்பட ஓ.பி.எஸ் எல்லோருக்கும் அழைப்பு விடுகிறார். இதில் தவறில்லை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.