மும்பை: மும்பையில் குண்டும், குழியுமான சாலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அவரது கணவர் விருப்பப்படி மருத்துவமனையில் பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் சாந்தாகுரூஸ் அடுத்த சாஸ்திரிநகர் பகுதியில் ரமேஷ் யாதவ் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு முதன் முறையாக பிரசவம் பார்ப்பதற்காக, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு அழைத்து சென்றார். ஆனால் முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது.
மருத்துவ வசதி இல்லாததால், தனது முதல் குழந்தை இறந்ததாக வருந்தினார். சில ஆண்டுகளில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பமானார். இந்த முறை சுகப் பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக, மனைவியை மும்பைக்கு அழைத்து வந்தார். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்று நினைத்தார். சாஸ்திரிநகரில் இருந்து மருத்துவமனையை அடைய பத்து அல்லது பன்னிரண்டு நிமிடங்கள் தேவைப்படும்.
ஆனால், தற்போது சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். இந்நிலையில் ரமேஷ் யாதவின் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் தனது மனைவியை ஆட்டோவில் மருத்துவமனைக்கு ரமேஷ் யாதவ் அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் ஆட்டோவிலேயே அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குழந்தையையும் தாயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறிய ரமேஷ் யாதவ், தான் விரும்பியபடி மருத்துவமனையில் மனைவிக்கு பிரசவம் பார்க்க முடியவில்லையே என்று கவலையுடன் கூறினார்.