இந்திய மாணவர்களுக்கு கனடா விசா கிடைப்பதில் காலதாமதம் – விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்

புதுடெல்லி: கனடாவில் அடுத்த மாதம் கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இந்திய மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என இந்திய தூதரம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஒட்டாவா நகரில் உள்ள கனடாவுக்கான இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: கனடாவில் அடுத்த மாதம் கல்வியாண்டு தொடங்குகிறது. கனடா கல்லூரிகளில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் பெறப்பட் டுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, மாணவர்களின் விசா விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும் என கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை முன்வைக்கும்போது மாணவர்கள் ஏற்கெனவே தங்களது கல்வி கட்டணங்களை செலுத்தியிருப்பது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, கனடா வரும் மாணவர்களுக்கு உதவும் விதமாக தற்காலிக செயல்திட்டங்களை கனடா அதிகாரிகள் வகுத்துள்ளனர். மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ள நிலையில், உரிய நேரத்துக்கு கனடா வரமுடியாத மாணவர்களுக்காக சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. எனவே, இந்திய மாணவர்கள் தாங்கள் பயிலவிருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விசா தாமதத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கவும், விசா நடைமுறையை விரைவுபடுத்தவும் ஐஆர்சிசி (குடியேற்றம், அகதிகள் மற்றும் கனடா குடியுரிமை) வலைதளத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

20 நாளில் விசா..

கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து எஸ்டிஎஸ் (மாணவர்கள் நேரடி வழிமுறை) மூலமாக ஐஆர்சிசி வலைதளத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு படிப்புக்கான விசா அனுமதி 20 நாட்களுக்குள் வழங்கப்படும். கனடா அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. எனவே, ஏராளமான மாணவர்கள் இந்த வழிமுறையின் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்து பயனடைய முடியும். இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.