தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வழங்க தடை கோரிய மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலின் போது அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் முக்கியத்துவம் கருதி விரிவான விவாதம் தேவைப்படுகிறது என்பதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே விசாரணை நடைபெற்ற போது கூறப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் சிக்கலான தன்மை கருதியும், 2013ம் ஆண்டு சுப்பிரமணிய பாலாஜி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் கருதியும் இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, எந்த அமர்வு என உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனவும் உத்தரவில் கூறினார்.
அனைத்து அறிவிப்புகளையும் இலவசங்களாக கருத முடியாது என தெரிவித்த நீதிபதி இவ்வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM