உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்று ஓய்வு பெறும் நிலையில், 72 ஆண்டுகால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் இன்று நேரலை செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 48 ஆவது தலைமை நீதிபதியாக உள்ள என்.வி ரமணா 65 வயதை பூர்த்தி செய்யும் நிலையில் இன்றோடு ஓய்வு பெற உள்ளளார். உச்சநீதிமன்றத்தின் 49 ஆவது மற்றும் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு லலித் நாளை பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறும் நாளன்று, புதிதாக பொறுப்பேற்க உள்ள தலைமை நீதிபதியோடு இணைந்து வழக்குகளை விசாரிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று தலைமை நீதிபதி என்.வி ரமணா, புதிய தலைமை நீதிபதி யு.யு லலித் மற்றும் ஹீமா கோலி ஆகியோரோடு இணைந்து வழக்குகளை விசாரித்தார். அதனை ஒட்டி இன்று உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை ஆன்லைன் வாயிலாக நேரலை செய்யப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய பாலியல் வழக்குகள் மற்றும் திருமணம் சார்ந்த வழக்குகளை தவிர உச்சநீதிமன்றத்தின் மற்ற வழக்கு விசாரணைகளை நேரலை செய்யலாம் என தீர்ப்பளிக்கப்பட்ட போதும் இதுவரை நேரலை செய்யப்பட்டதில்லை. கர்நாடகா, குஜராத், ஒடிசா போன்ற மாநில உயர்நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை நேரலை செய்யப்படடாலும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை முறை இது நாள் வரையில் பொதுமக்களுக்கு தெரியாமலேயே இருந்தது.
இன்று முதன் முறையாக உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை மக்கள் அறிந்து கொள்ள உதவும் என நம்பப்படுகிறது. இதே போல நீதிபதிகள் நியமனத்திலும் நீதிபதிகள் பணி மாற்றத்திலும் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவை என்பது பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்தாக உள்ளது.
தன்னுடைய கடைசி பணி நாளான இன்று தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரிய வழக்கை, வழக்கின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்ட நீதிபதி ரமணா, மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து இந்த விவகாரத்தை ஆராயலாம் என தெரிவித்தார்.
நீதிபதி என்.வி ரமணாவை அட்டர்னி ஜெனரலும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருமான கே.கே.வேணுகோபல், சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா தொடங்கி பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் பாராட்டி பேசினர். அவர் தன் ஜனநாயக கடமையை திறம்பட ஆற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று பரவலாக தெரிவித்தனர்.
தொடர்ந்து நன்றியுரை ஆற்றிய நீதிபதி என்.வி ரமணா, வழக்குகளின் தேக்கம் பெரிய சவால் என்றும், நீதிமன்றத்தின் மாண்பும் நம்பகத்தன்மையும் காக்கப்பட வேண்டும் என்றும், எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்றும் இவை அனைத்துக்கும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு முக்கியம் என்றும் தெரிவித்தார்.