காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், யாரும் எதிர்பாராத விதமாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவியிலிருந்து இன்று விலகினார். இது காங்கிரஸ் உட்பட சில எதிர்க்கட்சிகளுக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு வரிசையாக சில காங்கிரஸ் தலைவர்கள் விலகி வருகின்றனர். அந்த வரிசையில் குலாம் நபி ஆசாத்தும் தற்போது அத்தகைய முடிவையே எடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தையும் குலாம் நபி ஆசாத் எழுதியிருந்தார். அதில், காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதற்கும், 2014-ம் ஆண்டு தேர்தலில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தியின் செயல்களே காரணம் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸின் இத்தகைய பின்னடைவையும், ராகுல் காந்தியையும் ஒருசேர விமர்சித்திருக்கிறார்.
இது குறித்துப் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, “குலாம் நபி ஆசாத்தின் கடிதத்தையும், 2015-ல் நான் எழுதிய கடிதத்தையும் படித்தால் அதில் நிறைய ஒற்றுமைகள் இருப்பது தெரியும். காங்கிரஸில் முக்கிய பிரச்னை என்னவென்றால், ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர் என்பதே. அனைவருக்கும் இது ஒன்றுதான். அதோடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ கட்சியைக் கவனிப்பதுமில்லை. அடிப்படையில் அவர், இத்தனை ஆண்டுகளில் தன்னுடைய மகனை ஊக்குவிக்க மட்டுமே முயற்சிக்கிறார். இதன் காரணமாகவே, கட்சிக்கு விஸ்வாசமானவர்கள் ஒவ்வொரு ஆளாக வெளியேறி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் காந்திகள் மட்டுமே இருக்கும் ஒரு காலம் வரும் என்று நான் கணித்திருந்தேன். அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில், ராகுல் காந்தி பா.ஜ.க-வுக்கு ஒரு வரப்பிரசாதம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “இந்தியாவின் மிகப் பெரிய பழைமையான கட்சி உடைந்துவருவதைப் பார்க்க வருத்தமாகவும், மிகவும் பயமாகவும் இருக்கிறது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.