லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கு தீவிரமாக பரவியது. தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நெருப்பை கட்டுப்படுத்த போராடினர்.
தீப்பிடித்த கட்டடத்தில் இருந்து காயங்களுடன் 7 பேரை மீட்ட வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் தீயில் சிக்கியதால் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலியான அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ள காவல் அதிகாரிகள் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.