தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு QR முறையானது ஒரு திட்டவட்டமான தீர்வு அல்ல என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் நிதித் திறனின் அடிப்படையில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியதன் காரணமாக அதனை சிறந்த முகாமைத்துவத்துடன் வாடிக்கையாளருக்கு விநியோகிக்க உரிய முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஊடாக, எரிபொருளைப் பெறுவதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக வரம்பு தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 12 மாதங்கள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘ஏப்ரல் 18ஆம் திகதி முதல் சுமார் 4 மாதங்களுக்கு நான் இந்தப் பொறுப்பை அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர், மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் எமது நிறுவனங்கள் பல்வேறு நபர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் நாம் புரிந்துகொண்டது இதுதான். அடுத்த 12 மாதங்களுக்கு சில சவால்கள் உள்ளன. நமது நிதித் திறனின் அடிப்படையில் தான் எமக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் உள்ளது. எனவே, நாங்கள் பொருத்தமான திட்டத்தை உருவாக்காத வரை இதை 100 சதவீத தீர்வாக பார்க்க முடியாது.’
‘எவ்வளவு கொடுக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் டிசம்பர் மாதம் வரை எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்று மத்திய வங்கி சொல்கிறது. எங்களால் முடிந்த அளவு இறக்குமதி செய்கிறோம். நம்மிடம் உள்ள இருப்பை முகாமைத்துவப்படுத்தி வழங்குவது தான் QR முறை.’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.