அமைச்சர் கே.என்.நேருவுக்கு இது போதாத காலம் போல. எதைப் பேசினாலும் சர்ச்சையாகிக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கே.என்.நேரு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சியைச் சேர்ந்த என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்து வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா சமீபத்தில் திருச்சி பிராட்டியூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பெயர் சொல்லி வரவேற்ற கே.என்.நேரு, டி.எஸ்.பி ஒருவரை வரவேற்றுப் பேசும் போது, “ஒரு காலத்தில் எஸ்.ஐ ஆக இருந்தபோது எனக்கு செக்யூரிட்டி ஆக இருந்தவர். இன்றைக்கு பதவி உயர்வு பெற்று டி.எஸ்.பியாக இங்கு வந்திருக்கிறார். அவருக்கு இருக்கக்கூடிய திறமை என்னன்னா, என்ன வேண்டுமானாலும் செய்யும் ஆற்றல் பெற்றவர். ஒருவரை குற்றவாளியாகவும் ஆக்க முடியும். குற்றவாளியில் இருந்து எடுக்கவும் தெரியும். நான் அதற்கு மேல அவரை சொல்ல விரும்பவில்லை. அவர் எங்களோடு வளர்ந்தவர்” எனப் பேசினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. `போலீஸாரை எந்த அளவுக்கு தி.மு.க.,வினர் தங்கள் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள் என்பதற்கு அமைச்சரின் இந்தப் பேச்சே சாட்சியாக இருக்கிறது. டி.எஸ்.பி எங்களின் வளர்ப்பு என்கிறார் கே.என்.நேரு. அப்படியானால் அந்த டி.எஸ்.பி யாருக்காகச் செயல்படுவார்’ எனப் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கே.என்.நேரு ஆதரவாளர்களோ, ‘அமைச்சர் ஏதோ ஒரு ஜாலிக்காக அப்படி பேசியிருப்பாரு. அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க’ என்கின்றனர்.