ஒரு படத்தையும் விடுவது இல்லை : தமிழ் சினிமாவில் உதயநிதி ஆட்சி

தமிழ் சினிமாவில் எந்த படம் வெளியாக வேண்டும் என்பதை உதயநிதியின் பட நிறுவனம் தான் முடிவு செய்கிறது. சமீப காலமாக, தமிழ் திரையுலகில் வெளியான பெரும்பாலான, 'மெகா பட்ஜெட்' படங்களை, முதல்வரின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதிக்கு சொந்தமான, 'ரெட் ஜெயன்ட்' பட நிறுவனமே கைப்பற்றுகிறது.

கொரோனா காலகட்டத்தில் கிடப்பில் போட்டப்பட்டு, மீண்டும் துவங்குமா என்ற சந்தேகத்தில் இருந்த, 'இந்தியன் 2' படத்தை, தற்போது 'லைக்கா' உடன் இணைந்து, உதயநிதி தயாரிக்கிறார். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வான உதயநிதி, 'மாமன்னன்' படத்தோடு சினிமாவுக்கு 'குட்பை' சொல்லி விட்டு, அரசியலில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், யாரோ கொடுத்த அறிவுரையில், தமிழ் திரையுலகையே ஆட்சி செய்யும் திட்டத்தை கையில் எடுத்து விட்டார்.

'எப்.ஐ.ஆர்., அண்ணாத்த, வலிமை, பீஸ்ட், ஆர்.ஆர்.ஆர்., எதற்கும் துணிந்தவன், டான், காத்து வாக்குல ரெண்டு காதல், ராதே ஷ்யாம், விக்ரம், ராக்கெட்ரி, லால்சிங் சத்தா' மற்றும் விரைவில் வெளியாக உள்ள, விக்ரமின் 'கோப்ரா' படம், அருள் நிதி நடிக்கும் 'டைரி' படம், கார்த்தியின் 'சர்தார்' படம் என, உதயநிதி கைப்பற்றிய படங்களின் எண்ணிக்கை பட்டியல் நீள்கிறது.


இதுகுறித்து, திரையுலகினர் கூறியதாவது:
தமிழகத்தில் எந்தெந்த படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பதை, ஒரு 'சிண்டிகேட்' தான் முடிவு செய்கிறது. இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் என்பது எல்லாருக்கும் தெரியும். பட்ஜெட்டை தாண்டி, சிறிய பட தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் வழங்க வேண்டும். ஆனால், இன்று தியேட்டர் கிடைக்காமல், 'ரிலீஸ்' தேதியை தள்ளி வைக்கும் சூழல் தான் பலருக்கு உள்ளது. மன்சூர் அலிகான் தயாரித்து நடித்துள்ள, 'கடமான்பாறை' படத்திற்கு, தியேட்டரே கிடைக்கவில்லை.

அமலாபால் தயாரித்து நடித்த 'கடாவர்' படத்தை, தியேட்டரில் வெளியிட முடியாமல், ஓ.டி.டி.,யில் வெளியிட்டார். அத்துடன், 'இனிமேல் படமே தயாரிக்கப் போவதில்லை' என்றும் கூறியுள்ளார். இங்கு படத்தை தயாரிப்பதை விட வெளியிடுவது மிகவும் சிரமமாகி விட்டது. 'யானை, குருதி ஆட்டம்' படங்கள் வெளியீட்டை பலமுறை தள்ளி வைத்து விட்டனர். உதயநிதி நிறுவனம் படத்தை வெளியிட்டால், லாப சதவீதம், தியேட்டர் வசூல் அனைத்தும் நியாயமாக இருக்கும் என்பதாலேயே, அவரிடம் படத்தை தருவதாக, சிலர் கூறுவதும் ஒரு காரணமாக இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர்-

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.