கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் 3-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து அமைச்சர் கணேசன் பேசியதாவது: தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைய, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பயிற்சி நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மறு பயிற்சி அளித்தல், குறுகிய கால பயிற்சி வழங்குதல், பயிற்சி வடிவமைப்பு, சான்றிதழ் வழங்குதல், வேலைவாய்ப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

கட்டுமானக் கழகத்தை சரியான முறையில் நடத்த, தொழிலாளர் துறையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் உடனடியாக தொழிலாளர்களை சென்றடையும் வகையில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க கட்டுமானக் கழகம் மூலம் மாவட்டம்தோறும் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

குறிப்பிட்ட தொழிலில் மட்டுமின்றி, பல்வேறு தொழில்களில் பயிற்சி அளித்து, அவர்களது தொழில் திறன் மேம்படுத்தப்படும். குறைந்த கால பயிற்சியாக இல்லாமல், 90 நாட்களுக்கு மிகாமல் பயிற்சி அளித்து, செய்முறைத் தேர்வு வைத்து, அதன்பிறகு சான்றிதழ் வழங்கப்படும். கட்டுமானக் கழகம் மூலம் பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தகுந்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார், தொழிலாளர் நலத் துறை செயலர் முகமது நசிமுதீன், ஊரகவளர்ச்சித் துறை செயலர் அமுதா,தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.