பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 24 பேர் வேனில் பெங்களூரு சென்றனர். நேற்று அதிகாலை துமக்கூரு மாவட்டம் சிராவை அடுத்துள்ள கலம்பெல்லா அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது வேன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு துமக்கூரு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கர்நாடக மாநிலம் துமக்கூரு அருகே நடந்த சாலை விபத்து எனது நெஞ்சை உலுக்கிவிட்டது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசியநிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்”என குறிப்பிட்டுள்ளார்.