கால்சென்டர் அமைத்து பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மணிகண்டன்(36). மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் (மகேந்திரா பைனான்ஸ்) இருந்து பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்று செல்பொனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் தருவதாக கூறியுள்ளார். லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸிங்குக்கு இன்ஸியல் தொகையாக ரூ.8000-ஐ வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 அனுப்ப சொல்லியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, பல செல்பேசி எண்களில் இருந்து பலர் மணிகண்டனை தொடர்பு கொண்டு கேட்டதையடுத்து, லோன் தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல தவணைகளாக மொத்தம் ரூ.67,880-ஐ வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், மணிகண்டனுக்கு லோன் கிடைக்கவில்லை. இதையடுத்து, இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத்தரும்படி கேட்டதற்கு மணிகண்டன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.10,000 கட்டவேண்டும் என கேட்டு வாங்கியுள்ளனர்.

அதன்பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதைத்தொடர்ந்தும் பலமுறை சிறுகசிறுக மொத்தமாக ரூ.1,12,780 கட்டியுள்ளார். முடிவில், தான் முழுமையாக ஏமாந்ததும், தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பதும் தெரிந்த பின்னர் மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டடது தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி முடிவில் காட்டுமன்னார்கோயிலில் பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த சஞ்சய், சித்தார்த்தன் மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம் ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் ஆன்ட்ராய்டு உள்ளட்ட 16 செல்போன்கள், 28 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகத்’தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தப்பியோடி தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவனங்களை கொடுக்கவோ அறிமுகம் இல்லாத செல்போன் எண்கள் மூலம் லோன் கொடுப்பதாக கூறுவதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பறிமுதல் செய்த ஆவணங்களை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.