காஷ்மீர்: ஜம்மு எல்லை அருகில் பிடிபட்ட தீவிரவாதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் ரத்தம் கொடுத்து காப்பாற்றியுள்ளனர்.
காஷ்மீரில் நேற்றுமுன்தினம் 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. மேலும் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். ரஜோரி மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இந்த நபர் ஏற்கெனவே ஒருமுறை எல்லையில் ஊடுருவிய போது மனிதாபிமான அடிப்படையில் அவரை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர். ஆனால் அதே நபர் தற்போது மீண்டும் ஊடுருவல் முயற்சியில் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர், பாகிஸ்தான் ராணுவ கர்னல் ஒருவர் எனக்கு 30,000 பணம் கொடுத்தார். இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துமாறு கூறினார் என்றார்.
அந்த நபர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் என்ற கிராமத்தைச் சேர்ந்த தபரக் ஹுசைன் எனத் தெரியவந்துள்ளது. அவரை அனுப்பிவைத்தது கர்னல் யூனுஸ் சவுத்ரி என்பதும் தெரியவந்துள்ளது. அந்த கர்னல் கொடுத்த பணத்தையும் தபரக் ஹுசைன் தன் வசமே வைத்திருந்தார்.
இதனிடையே, தீவிரவாதி தபரக் ஹுசைன் தாக்குதல் நடத்தும்போது இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். காயத்தால் அதிகமான ரத்தம் வெளியேற, அவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் மூன்றுபாட்டில் ரத்தம் கொடுத்து தீவிரவாதி தபரக் ஹுசைனுக்கு உதவியுள்ளனர். இதன்பின்பே தீவிரவாதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இப்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று ரஜோரியில் உள்ள இராணுவ மருத்துவமனையின் கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜீவ் நாயர் தெரிவித்துள்ளார்.