மாநில அளவிலான பொறுப்புகளை ஓரங்கட்டி விட்டு தேசிய அரசியலில் கவனம், பாஜகவில் ஐக்கியம் என பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வந்த நிலையில், இன்றைய தினம்
காங்கிரஸ்
கட்சியில் இருந்து ஒட்டுமொத்த வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சி தலைமை மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த சூழலில் தலைமை மாற்றம் தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து தேசிய அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு 5 பக்கங்களில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் சுமார் 50 ஆண்டுகால உறவை கொண்டிருந்தேன். தற்போது கனத்த இதயத்துடனும், வருத்தத்துடன் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.