’கே.என்.நேரு இனிமேல் அவ்வாறு பேசாமலிருக்க ஸ்டாலின் மூலம் அறிவுறுத்தப்படும்’-ஆர்.எஸ்.பாரதி

“தந்தை மகளிடம் பேசுவதுபோலதான் மேயர் பிரியாவிடம் அமைச்சர் நேரு பேசினார் என்றாலும், நேரு இனிமேல் அவ்வாறு பேசாமல் இருக்கும் வகையில் ஸ்டாலின் மூலம் அறிவுறுத்தப்படும்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தனது கடந்த கால தவறுகளை மறைக்க நேற்று தனது வயிற்றெரிச்சலை, பேட்டி எனும் பெயரில் பொய் மூட்டையாக அவிழ்த்து விட்டுள்ளார். திமுக ஆட்சியில் நிர்வாகம் உட்பட அனைத்து துறையிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம்.
கடந்த தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக இருந்தது கோவை. தற்போது கோவை மக்கள் திமுக ஆட்சியை வியந்து பாராட்டி , தேர்தலில் தவறு செய்ததை உணர்ந்து உள்ளாட்சியில் வெற்றியை தந்துள்ளனர்.
கோவையில் ஆச்சரியம் தரும் வகையில் அதிகமானோர் முதல்வருக்கு வரவேற்பு தந்ததை தாங்க முடியாமல் இல்லாது பொல்லாததை பேட்டியாக கூறியுள்ளார் பழனிசாமி. திமுக ஆட்சியில் அதிமுகவின் எந்த திட்டத்தையும் கைவிடவில்லை.
image
வேலுமணிக்கு சொந்தமானவர்கள் வெள்ளளூரில் பல ஏக்கர்களை வளைத்து போட்டுள்ளதால் அங்கு பேருந்து நிலையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு முறையாக நிதி ஒதுக்கவில்லை. பேருந்து நிலையத்திற்கு 61 ஏக்கர் தேவை. ஆனால் 50 ஏக்கர் நிலம்தான் கைப்பற்றினர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு. கடந்த ஆட்சியில் அதிமுக அறிவித்த எந்த திட்டத்துக்கும் பணம் ஒதுக்கவில்லை.
கோவை விமான நிலையத்திற்கு 1500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக அரசு நிதியே வழங்கவில்லை என எடப்பாடி பச்சையாக பொய் சொல்கிறார். ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக அறிக்கை தயாராகிவிட்டதை தெரிந்துக்கொண்டு, ஊழலை மூடி மறைக்க பொய்களை கூறி வருகிறார் எடப்பாடி.
கருணாநிதியை அடக்கம் செய்ய எடப்பாடி வீட்டிற்கு ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் சென்று மெரினாவில் இடம் கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்தார்கள். பின்னர் நீதிமன்றம் சென்று இரவில் வாதாடி இடம் பெற்றோம். ஆனால் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையே எங்கள் ஆட்சியில் அரசு விழாவாக நடத்தி வருகிறோம். ஜெ. பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டுமா என்பது கேள்விக்குறிதான்..? இருந்தாலும் கடந்த ஆட்சியின் இறுதி உத்தரவான அதைக் கடைபிடித்து வருகிறோம். ஒன்றுமே இல்லாமல் இருந்தவர்களை கோடீஸ்வரர்களாக்கிய ஜெ- வின் கோடநாடு இல்லத்தையே எடப்பாடி ஆட்சியில் காப்பாற்ற முடியவில்லை. தங்களது தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் சட்டம் ஒழுங்கு பற்றி பேசலாமா..?
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை ஊடகங்களில் பார்த்து தெரிந்து கொண்டதாக எடப்பாடி கூறினார். ஆனால் முதல்வர் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபோதும் கள்ளக்குறிச்சிக்கு 1 மணி நேரத்தில் உள்துறை செயலரையும், டிஜிபியை அனுப்பி 24 மணி நேரத்தில் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்து உயிர் சேதமின்றி பதற்றத்தை தடுத்தார்.
image
அண்மையில் அக்னி நியூஷ் சர்வீஷ் எனும் ஊடகம் நடத்திய கருத்து கணிப்பில் , 73 சதவீதம் பேர் தமிழகத்தில் பிற மாநிலத்தை காட்டிலும் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாகவும், 14 சதவீதம் திருப்திகரமாக இருப்பதாகவும் , 13 சதவீதம் மட்டும் திருப்தி இல்லை என்றும் கூறி உள்ளனர்.
Decision by discussion என்பது அண்ணாவின் கொள்கை , அதன்படிதான் பல குழுக்களை அமைத்துள்ளோம். 30..40 ஆண்டுக்கு முன்பு ராம்பிரசாத்ராவ் என்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரம்மி விளையாட்டை திறமைக்கான விளையாட்டு என்றார். ஆன்லைன் ரம்மியை இந்தியா முழுவதும் தடை செய்ய மத்திய அரசுதான் சட்டம் கொண்டுவர வேண்டும்.
ஆன்லைன் ரம்மி தொலைக்காட்சி விளம்பரத்தை தடுக்க மாநில அரசுக்கு இருக்கிறதா..? மத்திய அரசால்தான் முடியும். அகில இந்திய அளவில் சிறந்த முதல்வர் வரிசையில் ஒன்றே முக்கால் ஆண்டிலேயே 3 ம் இடம் வந்துள்ளார் ஸ்டாலின். கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். ஆறுக்குட்டி போல் பல குட்டிகள் அதிமுகவில் இருந்து வெளிவந்து விட்டது. தொடர்ந்து வெளிவரும். அதிமுகவினர் தங்களது குட்டிகளை பாதுகாக்க முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமி தேதி கொடுத்தால் அவருடன் நான் விவாதிக்க தயார். கட்டுமான பணி நடைபெற்ற வெள்ளலூர் பேருந்து நிலையத்தை விளையாட்டு மைதானம் ஆக்கி 50 ஏக்கர் பரப்பையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொடுப்போம்.
இலவசம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து குறித்து அதிமுக எந்த கருத்தும் கூறாததால் மக்கள் நலன் , அரசாங்கம் பற்றி அவர்களுக்கு தகவலை இல்லை என தெரியவந்துள்ளது. கோவையில் புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் திமுக குடும்பத்தினருக்கு சொந்தமான நிலங்கள் இருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, வேண்டுமானால் நீதிமன்றம் சென்று அதை தடுக்கட்டும். அவரது குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் ஆட்சியையே கலைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. எனவே அதை நாங்கள் சந்திக்கவும் தயார்.
image
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தான் வைக்க முடியும். கொடநாடு சம்பவம் தொடர்பாக படிப்படியாக விசாரணை நடக்கிறது. துரைமுருகன் என்னை விட மூத்தவர். எனவே கட்சி மாறி வருபவர்கள் குறித்த அவரது கருத்து குறித்து நான் பதிலளிக்க முடியாது.
அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியாவிடம் பேசியது தந்தை மகளிடம் பேசுவதை போல எடுத்து கொள்ள வேண்டும். மேயர் பிரியா நான் தூக்கி வளர்த்த பெண். பாசத்தில்தான் கே.என்.நேரு அப்படி பேசினார். மேயர் பிரியா வயதில் சிறியவர். நேருவின் மகளை விட சிறியவர். இனிமேல் இப்படி பேசாமல் இருக்குமாறு ஸ்டாலின் மூலம் சொல்லிவிடுகிறோம்.
சிறைக்கு அனுப்பிதான் வழக்கு நடத்த வேண்டும் என்றில்லை. டான்சி வழக்கு உட்பட பல வழக்கிலும் தவறான வழிகாட்டுதலால் தேவையில்லாமல் சிக்கி கொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை கைது செய்வதில் கருணாநிதி உடன்பாடு இல்லாமல்தான் இருந்தார். நீதிமன்றம்தான் அவரை கைது செய்தது. ஜெயலலிதாவை கருணாநிதி கைது செய்யவில்லை.
திமுகவில் இருமுறை துணை சபாயாகர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என பல இலவச பதவிகளை அனுபவித்தவர் விபி துரைசாமி . அவர் இப்போது இலவசங்கள் குறித்து கூறுவது தவறு” இவ்வாறு அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.