கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை: ஆய்வில் கண்டறியப்பட்டால் 6 மாத சிறை தண்டனை

தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டிமரத்துப்பட்டி, ஏமகுட்டியூர், தேவரசம்பட்டி, லளிகம், முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, எர்ரப்பட்டி, சவுளூர், பாளையம்புதூர், பாப்பாரப்பட்டி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

இதுதவிர வீடுகளிலும், தனி கூடாரத்திலும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேஷ்டி, துண்டு மற்றும் காடா துணிகள் மற்றும் காட்டன் சர்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வேஷ்டி, துண்டுகள் ஈரோடு, சேலம் மாவட்டத்திற்கு செல்கிறது. தினசரி 75 ஆயிரம் முதல் 1 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே போல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாகலூர், ஓசூர், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், தளி மற்றும் பல்வேறு இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகள் இயங்குகின்றன. இங்கு பட்டுநூல், காட்டன் துணிகள் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள், பெங்களூரு சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஜிஎஸ்டி வரி பிரச்னை, பஞ்சு, பருத்தி விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விசைத்தறித் தொழில் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும்,

மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை விவகார எல்லையாகக் கொண்டு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், சேலம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டப்பிரிவு 5ன் கீழ், ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன், 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ரக ஒதுக்கீடு ஆணை அறிவிப்பின்படி, பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட், ஜமுக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது, கைத்தறி ரக ஒதுக்கிடு சட்டத்தின் படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள், விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள், விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின்போது, கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள், விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ₹5ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். எனவே, தர்மபுரி மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை, விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கவும், நீதிமன்ற அபராதம் மற்றும் சிறை தண்டனையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற, சேலம் கலெக்டர் அலுவலகம்,4ம் தளம், 408ல் இயங்கி வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.