மதுரை: ‘கோயில்களில் மாடுகளை பராமரிக்க தனி இடம் இல்லாவிட்டால், தானமாக மாடுகள் பெறக் கூடாது’ என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருப்புவனம் நகரைச் சுற்றிலும் தனியார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசு மற்றும் காளை மாடுகளை கோயிலுக்கு தானமாக வழங்குகின்றனர். இந்த மாடுகளை பராமரிக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமையாகும்.
ஆனால், கோயில் நிர்வாகம் பக்தர்கள் தானமாக வழங்கும் மாடுகளை சரியாக பராமரிப்பது இல்லை. இதனால் பக்தர்கள் கோயில்களுக்கு தானமாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட மாடுகள் திருப்புவனம் வீதிகளில் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகளால் சாலையில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. இதுவரை 10-க்கு மேற்பட்ட மாடுகளும் விபத்தில் இறந்துள்ளன. இதனால், கோயில் மாடுகளை பராமரிக்க உரிய இடம் ஒதுக்கக் கோரி திருப்புனம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, திருப்புவனம் பகுதியில் கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க கோயில் மாடுகள் பராமரிப்பு மையம் தொடங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நேர்த்திகடனாக வழங்கப்படும் மாடுகளை கோயில் இடத்தில் பராமரிக்க வேண்டும். கோயில் நிலங்களை பிளாட் போட்டு விற்றால், இடங்கள் எவ்வாறு இருக்கும்? கோயிலில் நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகளை பராமரிக்க இடம் இல்லை என்றால், பராமரிக்க இடம் இல்லாததால் மாடுகள் தானமாக பெறப்படாது என கோயிலுக்கு வெளியே போர்டு வைக்க வேண்டும்.
நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகளை பராமரிப்பது தொடர்பாக திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29-க்கு ஒத்திவைத்தனர்.