பிரிட்டன் பிரதம வேட்பாளரான ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் . ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார் .
பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் அரசில் நிதி அமைச்சராக பணியாற்றியவர். பல்வேறு சர்சைகளுக்கு மத்தில் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் உள்ளார் என்பதும், அவருக்கு போட்டியாளராக வெளியுறவுத் துறைச் செயலாளர் லிஸ் டிரஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரிஷி சுனக் தனது மனைவியான அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் ‛கோ பூஜை’ செய்து வழிபாடு செய்துள்ளது இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது. லண்டனில் உள்ள பக்திவேதாந்தா கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தையொட்டி அவர்கள் கோ பூஜை செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் பசுவுக்கு அவர்கள் ஆரத்தி எடுத்து வணங்குவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ வாட்சாப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பரவி வைரலானது. ஏற்கனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று ரிஷி சுணக் தனது வீட்டில் கிருஷ்ணருக்கு பிரார்த்தனை செய்யும் பூஜையை நடத்தினார் என்பதும், இதுகுறித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடியதும் பரவலாக பேசப்பட்டது.
இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு குடிபெயர்ந்து சென்றாலும் இந்தியாவை போன்ற கலாச்சாரத்தை ரிஷி சுனக் அங்கும் பின்பற்றுவதும் பலரது மத்தியில் பேசு பொருள் ஆகி உள்ளது.