சண்டை; மன்னிப்பு; சமாதானம்; முடிவுக்கு வந்தது உதவி இயக்குநரை அறைந்த விவகாரம்!

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் `கண்ட நாள் முதல்’. அருண், நவீன் என இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கும் இந்தத் தொடரின் ஷூட்டிங்கில் நவீனுக்கும் உதவி இயக்குநர் குலசேகரனுக்கும் இடையில் வாக்குவாதத்தில் குலசேகரனை நவீன் அறைந்த சம்பவத்தில் தற்போது இருதரப்பும் சமாதானமாகி உள்ளனர்.

சமாதானத்துக்கு உதவி புரிந்த சின்னத்திரை இயக்குநர் சங்கத் தலைவர் தளபதியிடம் பேசிய போது,

‘’படப்பிடிப்பில் எங்களது உறுப்பினர் தாக்கப்பட்டது குறித்து எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்த எங்களது சக உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு நன்றி தெரிவிச்சாகணும்.

சம்பவம் குறித்து ரெண்டு தரப்புலயும் பேசியதுல ரெண்டு பேருமே நடந்ததை மறந்து கை கோர்க்க முடிவு செய்துட்டாங்க. நவீன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிச்சு கடிதம் கொடுத்திருக்கார். குலசேகரனுக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவை ஏத்துக்கிட்டதோடு, அவர் காயத்தால் வேலைக்குப் போக முடியாத நாளுக்கு ஊதியமா ஒரு தொகையைத் தரவும் நவீன் சம்மதிச்சிட்டார்.

பெரிய திரையோ சின்னத்திரையோ இயக்குநர்களைக் கேப்டன்னு அழைப்பாங்க. உதவி இயக்குநர்களும் நாளைய இயக்குநர்கள்தான்” என்றார் தளபதி.

நவீன்

’சம்பவம் நடந்தவுடன் இயக்குநர் சங்கத்தை அணுகி புகார் தந்தேன். அந்த நிமிடத்திலிருந்து சங்கம் எனக்கு அத்தனை உதவிகளையும் செய்தது. இப்போது அனைத்து பிரச்னைகளும் முடிந்து சுமுகமான ஒரு நிலை உண்டாகி விட்டது. இனி என் வேலைகளைத் தொடரப் போகிறேன்’ என்கிறார் உதவி இயக்குநர் குலசேகரன்.

இந்த விவகாரம் குறித்து நடிகர் நவீனிடமும் பேசினோம்.

‘’குலசேகரன் என்னுடைய முந்தைய சீரியல்லயே என் கூட ஒர்க் பண்ணினவர்தான். டயலாக் சொல்லித் தருவார். அன்னைக்கு தப்பா ஒரு டயலாக் சொன்னார். அது தப்புனு நான் சொன்னேன். அவர் இல்லைனு வாக்குவாதம் பண்ணினார். பதிலுக்கு நானும் பேச அப்படியே நீண்டு கைகலப்பாகிடுச்சு. அவரும் என்னைத் தாக்க வந்தார். நான் தடுத்தேன். அப்ப என் கை அவர் மேல பட்டதுல அவருக்குக் காயம் உண்டாகிடுச்சு. இதுதான் நடந்தது. ஆனா ஷூட்டிங் கூப்பிட்டு நான் வரலைங்கிற மாதிரி செய்தி பரவிடுச்சு. நான் ரொம்ப கஷ்டப்பட்டு சீரியல்ல இன்னைக்கு இருக்கிற இடத்துக்கு வந்திருக்கேன். நான் எப்படிங்க ஒரே நாள்ல பெயரைக் கெடுக்க விரும்புவேன்’’ என்றவர். இப்ப பிரச்னை சரியாகிடுச்சு. ஒருத்தருக்கொருத்தர் வருத்தம் தெரிவிச்சு நடந்ததை மறந்தாச்சு. அவருக்கு குறிப்பிட்ட தொகையை நான் தந்தது உண்மைதான். அது அவருக்கு மருத்துவச் செலவுக்கும் ரெண்டு நாள் இந்தக் காயத்தால் வேலைக்குப் போக முடியாம இருந்ததுக்கும்தான்’’ என்கிறார் நவீன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.