குர்கான்: அரியானாவில் மனநலம் குன்றிய மனைவிக்கு சாப்பாடு கொடுக்கும் போது ஏற்பட்ட தகராறால், அவரை கழுத்து நெரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் குர்கான் அடுத்த சூரிய விஹார் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீபக் கிர்பத் (59). இவரது மனைவி பூனம் அரோரா (58). இவர்களுக்கு மான்யதா வில்லியம் என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் மனநலம் குன்றிய தனது மனைவி பூனம் அரோராவை தீபக் கிர்பத் கவனித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவி பூனம் அரோரா திடீரென தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தீபக் கிர்பத் தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுக்கையில் இறந்து கிடந்த பூனம் அரோராவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘பூனம் அரோராவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்தை நெரிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் ஆணியின் கீறல்கள் உள்ளன. எனவே அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அவரது கணவர் தீபக் கிர்பத்திடம் விசாரணை நடத்தியபோது அவர் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். மனநலம் குன்றிய தனது மனைவிக்கு சாப்பாடு கொடுக்கும் போது, அவரோடு தகராறு ஏற்பட்டதால் அவரை தாக்கியுள்ளார்.
பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து, தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். அவரை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.