சிவகங்கையில் நகராட்சி குடிநீர் குழாயில் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் தொழிலாளி ஒருவர் அலாரம் கண்டுபிடித்துள்ளார்.
சிவகங்கையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வரும் நேரத்தை அறிந்து குடங்களில் பிடிக்கின்றனர்.
சிபி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளங்கோவன். இவரது மனைவி சுமதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காத்திருந்து தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரும் வீணாகியது.
இதை சரிசெய்ய யோசித்த இளங்கோவன், நகராட்சி குடிநீர் வந்ததும் அலாரம் ஓலிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் குழாய்க்கு அருகே ஒரு பாத்திரத்தை தொங்கவிட்டுள்ளார். அதில் தண்ணீர் விழுந்ததும் அலாரம் ஓலிக்கிறது.
இதன் மூலம் தண்ணீர் வருவதை அறிந்து பிடிக்கின்றனர். இதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது.
இளங்கோவன், தனது யோசனையால் பெரிய அளவில் செலவே இல்லாமல் தண்ணீர் வருவதை அறியும் அலாரம் கண்டுபிடித்து அனைவரது பாராட்டை பெற்றுள்ளார்.