ஜனாதிபதி தலைமையில், சர்வதேச நாணய நிதியத்துடனான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை

தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (26) பிற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடலில் இணைந்துகொண்டதுடன், இரு தரப்பிலும் சாதகமான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மின் கட்டணத் திருத்தம் மற்றும் மதுவரிச் சட்டம் உள்ளிட்ட திறைசேரி தொடர்பான இன்றைய கலந்துரையாடலில், தேவையான மேலதிக தகவல்களை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தகவல்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகர்கள், சட்ட ஆலோசகர்கள் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதுடன், எதிர்வரும் புதன்கிழமை (31) அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் சபையின் தலைவர் பீட்டர் ப்ரூயர் (Peter Breuer), பிரதித் தலைவர் ஒசைரோ கொசைகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டொபாகன்ஸ், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் உட்பட மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-26

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.