ராஞ்சி: தமது பெயரில் நிலக்கரி சுரங்க முறைகேடு உரிமம் பெற்றதால் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் மனைவி கல்பனாவை ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் சோரன். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு கொடுத்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கும் பரிந்துரையை ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தம்மை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை அப்படியே பாஜகவினர் எழுதியதைப் போலவே இருக்கிறது. ஆளுநர் இன்னமும் எனக்கு அந்த பரிந்துரையை அனுப்பவும் இல்லை. அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்
இன்னொரு பக்கம், ஜார்க்கண்ட் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்கிறது பாஜக. இது தொடர்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில், தார்மீக அடிப்படையில் ஹேமந்த் சோரன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஜார்க்கண்ட் சட்டசபை கலைக்கப்பட வேண்டும். மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோவது உறுதி என்றே கூறுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். அப்படி ஒருவேளை ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த விவாதமும் நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனர் சிபு சோரன் மீண்டும் முதல்வராக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொரு பக்கம், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாணியில், முதல்வர் பதவியை இழந்தால் மனைவி கல்பனாவை ஹேமந்த் சோரன் முதல்வராக்குவார் என கூறப்படுகிறது.