ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என்று மாநில ஆளுநரிடம் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில்ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக அவர்மீது பாஜக குற்றம் சாட்டியது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் கடந்த பிப்ரவரியில் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக ஹேமந்த், பாஜக தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை சீலிட்ட உறையில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பெய்ஸுக்கு நேற்று அனுப்பி வைத்தது.
அதில் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திவருவதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வர் கருத்து
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எனது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்தோ, ஆளுநரிடம் இருந்தோ அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வரவில்லை. எதற்கும் தயார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவி மட்டும் பறிக்கப்பட்டால் அவர் பதவியை ராஜினாமாசெய்துவிட்டு மீண்டும் முதல்வராக பதவியேற்பார். அடுத்த 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார்.
தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டால் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, கட்சியின்மூத்த தலைவர்கள் ஜோபா மான்ஜி,சாம்பாய் சோரன் ஆகியோரில் ஒருவர் முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று தெரிகிறது.