நமது பாதுகாப்புப் படைகள் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வர்ணமளிப்பு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.
எதிர்காலத்தில் தரை, வான், கடலில் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.
வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி மற்றும் அறிவு அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்கனவே இந்த விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக வர்ணம் வழங்கும் நிகழ்வில் நேற்று (25) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக கொடி வர்ணங்களுக்கு சர்வமத ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விசேட உரை நிகழ்த்தியதுடன் ஜனாதிபதி வர்ணமும் பல்கலைக்கழக வர்ணமும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைத்தார்.
பின்னர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் விசேட உரை நிகழ்த்தியதுடன் பல்கலைக்கழக கொடி மற்றும் வண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
சேர் ஜோன் கொத்தலாவல வளாகத்தில் உள்ள நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் இட்டார்.
ஜனாதிபதி அவர்களுக்கு இங்கு விசேட நினைவுப் பரிசு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மேலும் கூறியதாவது:
“சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வர்ணமளிப்பு விழாவிற்கு என்னை அழைத்ததற்காகவும், முப்படையினரின் முதலாவது இராணுவ அணிவகுப்பைப் பார்வையிடுவதற்கு என்னை அழைத்ததற்காகவும் பல்கலைக்கழகத்திற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தபோது ஜோன் கொத்தலாவல அவர்களின் கந்தவல இல்லம் நினைவுக்கு வந்தது. இன்று அந்த வீட்டின் ஒரு பகுதி இருக்கிறது. சுற்றிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நான் சிறுவயதில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். சேர் ஜோன் கொத்தலாவல எனது பெற்றோருக்கு மிகவும் நெருக்கமானவர்.
அவருடைய வரலாற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஒரு பக்கம் அரசியல்வாதி. மற்றும் இரண்டாவது காலாட்படையின், இரண்டாவது படையணி அதிகாரி. அவர் குருநாகலில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டபோது, அவர் மேஜராக இருந்தார். எனக்கு மேஜர் கொத்தலாவல என்றே தெரியும். அவர் குறிப்பாக நிர்மாணத்துறை அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
அப்படித்தான் அவர் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போர் காலத்தில், அவருக்கு கேர்ணல் பதவி வழங்கப்பட்டது. இந்தியாவிலும் இலங்கையிலும் கேர்ணல் பதவியை விட உத்தியோகபூர்வ பதவி நிலையில் எவரும் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். அவருக்கு அது கிடைத்தது. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சிலுக்கு கேர்ணல் பதவி இருந்தது. அவர் கேர்ணல் என்றும் அழைக்கப்பட்டார்.
ஜோன் கொத்தலாவல அவர்களுக்கும் இராணுவ அறிவு இருந்தது. மேலும், நிர்மாணத்துறை அமைச்சராக விமான நிலையங்களையும், பல இராணுவ தளங்களையும் அவர் நிர்மாணித்தார். அதற்காக அவருக்கு கீழ் தனி தொழிலாளர் பிரிவொன்றும் இருந்தது. அங்கிருந்துதான் பிரித்தானிய இராணுவம் இலங்கைக்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது.
அவர் கந்தவலயில் வாழ்ந்தார். ஆனால் கந்தவலயில் உள்ள வீட்டை பிரித்தானிய விமானப்படைக்கு கொடுத்துவிட்டு கொழும்புக்கு வந்து வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீடு இலங்கையின் கட்டளைத் தளபதி அட்மிரல் லேட்டன் அவர்களின் வீட்டிற்கு அருகில் இருந்தது. யுத்தத்தின் போது, அவர் பெரும் பணியாற்றினார். அத்துடன், 1942ஆம் ஆண்டளவில் இலங்கையின் மீது படையெடுப்பு நடத்தப்படலாம் என பிரித்தானியா அஞ்சியது. அத்தகைய படையெடுப்பு ஏற்பட்டால் இலங்கையில் உள்ள படைகளை வழிநடத்த சேர் ஜோன் கொத்தலாவல தெரிவு செய்யப்பட்டார்.
டி.பி. ஜயதிலக, டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. யுத்தத்தின் போது அவர் செய்த பணிகளை யாரும் மறக்கவில்லை. சேர் ஜோன் கொத்தலாவல மட்டும் அல்ல, யுத்தத்தின் போது இலங்கையின் சிவில் பாதுகாப்பு இலங்கையர் ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர்தான் சேர் ஒலிவர் குணதிலக்க. பின்னர் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். ஒரு காலனித்துவத்தில் வேறு எங்கும் இதுபோன்ற பொறுப்பு அந்த நாட்டின் குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை.
சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்ற பின்னரும் அளப்பரிய சேவைகளை செய்தார். பிரதமராவதற்கு முன் லக்ஷபானவை ஆரம்பித்தார். லக்ஷபான நிர்மாணத்தின் மூலம் இந்த நாட்டிற்கு நீர் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும், அவரது கீழ் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றது.
1977 ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் கீழ் நாங்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்தபோது, ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் பிரதமர், ஜனாதிபதி கொபல்லாவ ஆகியோருடன் சேர் ஜோன் கொத்தலாவல இருந்தார். அப்போதுதான், இராணுவத் தளபதி ஜெனரல் டெரிக் பெரேரா இராணுவத்தை நவீனமயப்படுத்த ஒரு பாதுகாப்பு பல்கலைக்கழகம் தேவை என்ற யோசனையை முன்வைத்தார். அவர் இது குறித்து சேர் ஜோன் கொத்தலாவலவிடம் பேசினார். இறுதியாக சேர் ஜோன் கொத்தலாவல இந்தக் கட்டிடத்தைக் வழங்க ஒப்புக்கொண்டார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதி அவர்கள் இராணுவத் தளபதியுடன் சென்று, அவரை ஜெனரல் நிலைக்கு பதவி உயர்த்தினார்.
சேர் ஜோன் கொத்தலாவல அவர்களாலேயே இந்தப் பல்கலைக்கழகத்தை விரைவாக ஆரம்பிக்க முடிந்தது. நமக்கு என்ன யுத்தம் இருக்கிறதா என்றும், ஏன் இப்படி ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் ஒரு சிலர் கேட்டார்கள். ஆனால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, யுத்தம் ஏற்பட்டது.
எனவே இந்தப் பல்கலைக்கழகம் அதன் தொடக்கத்தில் இருந்தே முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தை வழங்கிய சேர் ஜோன் கொத்தலாவல அவர்களையும் இந்தப் பணியை ஆரம்பித்து வைத்த ஜெனரல் டெரிக் பெரேரா அவர்களையும் நாம் குறிப்பாக நினைவுகூர வேண்டும்.
இன்று சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் புகழைப் பெற்றுள்ளது. ஒரு பாதுகாப்பு பல்கலைக்கழகமாக உங்கள் திறமை வெளிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலத்தில் போராடிய பல அதிகாரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். எனவே இந்தப் பல்கலைக்கழகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மேலும், திறமையான அதிகாரிகளை நமது இராணுவத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டுக்கு இப்படி ஒரு பல்கலைக்கழகம் தேவை. நாங்கள் இதைத் தொடங்கியபோது, பல நாடுகளில் பாதுகாப்புப் பல்கலைக்கழகங்கள் இருக்கவில்லை. நான் இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு பாடநெறிகள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளேன். அவைகள் சிறந்த பாடநெறிகள். மேலும் நல்ல விரிவுரையாளர்கள் இங்கு உள்ளனர். இது ஒரு மறைக்கப்பட்ட பல்கலைக்கழகம். பலருக்கு இதன் மதிப்பு தெரியாது. ஆனால் இந்தப் பல்கலைக் கழகம் இராணுவத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. சிவில் மாணவர்கள் இங்கு இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். அது ஒரு நல்ல வேலைத்திட்டம். அதன் மூலம் பலருக்கு கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, இப்பல்கலைக்கழகம் குறித்து கூறப்படும் விமர்சனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஒரு இராணுவத்தை வழிநடத்த வேண்டுமானால், அது இராணுவத்தின் தலைமையைப் பொறுத்துள்ளது. மேலும் அந்த இராணுவத்திற்கு ஒழுக்கம் தேவை. ஒழுக்கம் இல்லாமல் இராணுவம் முன்னேற முடியாது. ஒரு இராணுவம் ஒழுக்கத்துடன் மட்டுமே முன்னேற முடியும். மேலும் இராணுவத்தை ஒழுக்கத்தால் மட்டும் வழிநடத்த முடியாது. ஒழுக்கத்துடன் பயிற்சியும் தேவை. ஒரு இராணுவம் ஒழுக்கமும் பயிற்சியும் பெற்றாலும் வெற்றியடைய முடியாது. அந்த இராணுவத்திற்கு அறிவு இருக்க வேண்டும். இராணுவ அறிவு மற்றும் பிரதேச அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவுடன் வெற்றி கிடைக்கும்.
இங்குள்ள தலைவர்களுக்கு ஒழுக்கம், பயிற்சி, அறிவு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து, இராணுவம் அனைத்துப் பிரிவுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்குகிறது. சிலர் இராணுவத் தளபதிகளாக மாறுகிறார்கள். மற்றவர்கள் இந்தப் பட்டத்துடன் பல்வேறு துறைகளில் சென்று சேவை செய்கிறார்கள். அந்த அறிவை புத்தகங்கள் மூலம் மட்டும் பெறுவதில்லை, அறிவு பெற விளையாட்டு மற்றும் யுத்தப் பயிற்சி முக்கியம். இவை அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பல்கலைக்கழகம் மட்டுமின்றி, அந்த பயிற்சியை வழங்குவதற்காக பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நமது பாதுகாப்பு கல்விக்கு அவசியம். அந்த நிறுவனங்கள் அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் ஏற்படப்போவது, நாம் அறிந்த மற்றும் பார்த்த யுத்தம் அல்ல. உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய தொழில்நுட்பம், புதிய அறிவு வருகிறது. குறிப்பாக யுத்தம் என்பது நிலம், வான், கடலில் மாத்திரம் ஏற்படப்போவதில்லை. சைபர் தொழில்நுட்பமும் வருகிறது.
மேலும், இராணுவம் பணிபுரியும் போது பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அறிவு உங்களுக்குத் தேவை. எனவே இன்று இந்த வர்ணங்களைப் பெறும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.” என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்ற), பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மாஅதிபர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-26