16 ஆண்டுகளுக்கு முன் தீர்க்கப்படாத ஒரு புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கும் நாயகன், அதில் வெற்றி கண்டாரா என்பதை பல்வேறு ஜானர்களின் வழி சொல்கிறது அருள்நிதி நடித்திருக்கும் ‘டைரி’ திரைப்படம்.
உதவி ஆய்வாளராக பணியில் அமரக் காத்திருக்கும் நபர்களுக்கு எல்லாம் முடிவுரை எழுதப்படாத வழக்குகள் தனித்தனியே ஒதுக்கப்படுகின்றன. 16 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கைக் கையிலெடுக்கிறார் வரதன். அது அவரை உதகை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஓர் இரவு பல்வேறு பின்புலத்திலிருந்து வரும் நபர்களை அழைத்துச் செல்லும் பேருந்தில் வரதனும் உள்ளே நுழைகிறார். பேருந்தில் இருப்பவர்கள் யார்; கொலையாளி யார்; வரதனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் எனச் சுழற்றிச் சுழற்றி கதையை நகர்த்தி புதிர் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்திருக்கின்றனர்.
வரதனாக அருள்நிதி. அவரின் கரியரில் நான்காவது போலீஸ் படம். ACP, கான்ஸ்டபிள் என முன்பு வந்தவர் இந்த முறை அவதரிப்பது உதவி ஆய்வாளர் வேடத்தில். ஆனாலும், அதிகார தொனியில் பெரிய வித்தியாசமில்லை. நான்கு நபர்களைப் போட்டு பொளக்கிறார் அவ்வளவுதான். இன்னொரு உதவி ஆய்வாளர் பவித்ராவாக அறிமுக நடிகை பவித்ரா மாரிமுத்து. முதல் காட்சியில் ஒருவரை அடித்து நொறுக்கி அதிரடியாக என்ட்ரியாகும் பவித்ராவுக்கு அதன் பின் பெரிதாகக் காட்சிகள் இல்லை. சண்டைக்காகவே எழுதப்பட்ட இன்னொரு காட்சியிலும், அவருக்குப் பதிலாக அருள்நிதி ஆஜராகி அந்த சண்டையை முடித்துவிடுகிறார்.
படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென தனித்தனியாகப் பின்னணி கதைகளும் இருக்கின்றன. ஆனால், எழுத்தில் இருக்கும் அழுத்தம் காட்சி அமைப்புகளில் இல்லாததால், எந்தவித அதிர்வையும் அவை ஏற்படுத்தாமல் அப்படியே கடந்துவிடுகின்றன. சாம்ஸ் ஒரு சில காட்சிகளில் மட்டும் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஷா ராவுக்கு அமைந்ததெல்லாமே உருவகேலி, இரட்டை அர்த்த வசனங்கள்தான். ஆனால், சிரிப்பு மட்டும் எங்குமே வரவில்லை. கிஷோருக்கும் செம்பிக்கும் டைட்டில் கார்டில் கௌரவ தோற்றம் எனப் போடுகிறார்கள். ஆனால், ஜெயப்பிரகாஷ், அஜய் ரத்னம் எனப் பல சீனியர்கள்கூட அப்படியான தோற்றத்தில்தான் வருகிறார்கள். இவர்களுக்கிடையே ரஞ்சனா நாச்சியாரின் வேடம் மட்டும் கொஞ்சம் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.
சில படங்கள் முதல் பாதி சோதித்து இரண்டாம் பாதி சீறிப் பாயும். சில படங்கள் முதல் பாதியில் அமர்க்களப்படுத்திவிட்டு, இரண்டாம் பாதியில் தூங்க வைத்துவிடும். ‘டைரி’ இதில் முதல் வகை. முதல் பாதியில் பேருந்து பயணிகள் என்கிற ரீதியில் எக்கச்சக்கச்சக்கமாய் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள். இடைவேளை வரை அது தொடர்வது நம்மை ஒரு கட்டத்தில் சலிப்படைய வைத்துவிடுகிறது. ஹாரர், த்ரில்லர், ஃபேன்டஸி, ஆக்ஷன் என ஒரே படத்தில் ஓராயிரம் ஜானர்களைக் கலந்து கட்டி எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன். அதனாலேயே படம் எந்த ஜானரை நோக்கிச் செல்கிறது என்பதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது.
நிறைய முடிச்சுகள், அதைக் கச்சிதமாக அவிழ்த்ததில் ஓரளவு வெற்றிபெற்றுவிடுகிறார் இயக்குநர். ஏற்கெனவே இருக்கும் கதாபாத்திர அறிமுகங்களும், ஜானர்களும் போதாது என்னும் குறைக்கு ESPயும் சில நிமிடங்கள் வந்து போகிறது. நமக்கே ‘இப்பவே கண்ண கட்டுதே’ என எண்ண வைத்துவிடுகிறது. அதேபோல் முடிச்சுகள் அவிழ்ந்து விடைகள் கிடைத்த பிறகும், ‘இன்னும் விளக்குகிறேன்’ என்கிற ரீதியில் காட்சிகளை அடுக்கிக்கொண்டே சென்றிருக்கிறார்கள்.
ரான் ஈத்தன் யோஹனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. முதல்பாதியில் இன்னுமே தயவுதாட்சண்யமின்றி சில காட்சிகளைக் கத்தரித்திருக்கலாம் எடிட்டர் ராஜ சேதுபதி. அரவிந்த் சிங்கின் கேமரா பேருந்து என்ற குறுகலான இடத்திலும் சரி, ஊட்டியின் வளைவுகளிலும் சரி, கதைக்கு ஏற்ற பதைபதைப்பைக் கூட்டியிருக்கிறது. ஓடும் பழைய அரசுப் பேருந்து, 16 வருடங்கள் பழைமையான சிதைந்துபோன பேருந்து ஆகியவற்றில் கலை இயக்குநர் ராஜூவின் உழைப்பு தெரிகிறது.
இரண்டாம் பாதியில் இருக்கும் கிரிப்பான திரைக்கதை, முதல் பாதியிலும் இருந்து, எழுத்தில் இருக்கும் சுவாரஸ்யம் படமாக்கிய விதத்திலும் பிரதிபலித்திருந்தால் இன்னமுமே ஆர்வமாக இந்த ‘டைரி’யைப் புரட்டியிருக்கலாம்.