சென்னை: ஈரம், ஆறாவது சினம், வல்லினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அறிவழகன் தற்சமயம் இயக்கியுள்ள வெப் சீரிஸ்தான் தமிழ் ராக்கர்ஸ்.
குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் அறிவழகன் அருண் விஜய் கூட்டணி பார்டர் என்கிற திரைப்படத்தில் இணைந்தது. அந்த படம் ரிலீசுக்காக காத்திருக்க அதற்கு முன்னர் அவர்கள் சேர்ந்து பணிபுரிந்த மூன்றாவது ப்ராஜெக்ட் ஆன தமிழ் ராக்கர்ஸ்சை ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
அதில் கதாநாயகியாக நடித்திருக்கும் வாணி போஜன் இந்த வெப் சீரிஸ் தொடர்பாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்
சின்னத்திரை நயன்தாரா
நடிகர்கள் விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து தற்சமயம் பெரிய திரையில் பெரிய ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்டோரம் டெலிவிஷன் தொடரிலிருந்து தான் தற்சமயம் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வந்தனர் ரசிகர்கள்.
ஓராண்டு காத்திருப்பு
தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது தொடர்ச்சியாக வரும் சம்பளம் 60 வயது வரை நடித்துக் கொண்டே இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதில் நடித்தால் ஓரிடத்தில் தேங்கி இருக்கக்கூடிய நிலைமை ஏற்படும். அதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே வாணி போஜனின் கனவாக இருந்ததாம். தொலைக்காட்சி தொடர்களில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்ட வாணி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு சினிமா வாய்ப்புக்காக காத்திருந்திருக்கிறார். சில திரைப்படங்கள் வந்தாலும் அதில் நடித்திருந்தால் அந்த படத்தோடு சினிமா துறையை விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்குமாம். அதனால் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்த அவருக்கு விதார்த்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்தப் படத்திலும் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
மீரா அக்கா
ஆனால் வாணி போஜனுக்கு முதன் முதலில் பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ஓ மை கடவுளே படம்தான். இரண்டு கதாநாயகிகளுக்கும் அந்தப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக மீரா அக்கா என்கிற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் வரிசையாக படங்கள் நடித்து தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.
தொடர் நிராகரிப்புகள்
சீரியலில் இருந்து வந்ததால் ஆரம்பத்தில் நிறைய கதாநாயகர்கள் வாணி போஜனை நிராகரித்துள்ளார்களாம். பல படங்கள் பேசி அக்ரிமெண்டில் கையெழுத்திடும் வேளைகள் கூட அப்படி நடந்துள்ளதாம். இது போன்ற பல போராட்டங்களை தாண்டி தான் தற்சமயம் கதாநாயகியாக நடிக்கிறேன் இப்போது அதே நடிகர்கள் என்னை நடிக்க கேட்கும்போது நான் அவர்களுடைய படங்களை நிராகரித்துள்ளேன் என்று வாணி போஜன் பெருமையாக கூறியுள்ளார்.