தருமபுரி: தருமபுரியில் இன்று (வெள்ளி) நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது, ‘என் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறி பாமர விவசாயி ஒருவர் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் இன்று (வெள்ளி) மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரின் கவனத்துக்கு தெரிவித்தனர். கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப ஆட்சியர் பதிலளித்து வந்தார். சில கோரிக்கைகள் குறித்து பதில் தெரிவிக்குமாறு தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாமர விவசாயி ஒருவர் எழுந்து நின்று மைக்கை வாங்கி, ‘‘எனக்கும், எங்கள் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் சிலருக்கும் பாத்தியப்பட்ட கூட்டு பட்டா நிலம் உள்ளது. இதை, தனித்தனியாக பாகம் பிரித்து தனி பட்டா பெற முயற்சி செய்து வருகிறேன். பலமுறை முயன்றும் முடியவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டாலும் நடவடிக்கை இல்லை. மிக அலட்சியமாக பேசி என்னை அலைக்கழிக்கின்றனர். இதனால், எனது அன்றாடப் பணி, வருவாய் அனைத்தும் பாதிக்கிறது. எவ்வளவு நாள்தான் பொறுமை காப்பது. இதே நிலை நீடித்தால், பிறகு நான் இது தொடர்பாக கலெக்டராகிய உங்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன்’’ என்று அப்பாவித் தனமாக பேசினார்.
அவர் தெரிவித்த தகவல்களை, சீரியஸாக கேட்டுக் கொண்டிருந்த ஆட்சியர் சாந்தி, ‘இறுதியில் உங்கள் மீது தான் நடவடிக்கை எடுப்பேன்’ என விவசாயி வெள்ளந்தியாக பேசியதைக் கேட்டதும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார். பின்னர், ‘அதைச் செய்யுங்க முதல்ல…’ என்று கூறி சிரிப்பை தொடர்ந்தார். இதனால், அரங்கத்தில் பெரும் சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
அதன் பின்னர் பேசிய ஆட்சியர், ‘‘அய்யா, உங்கள் கோரிக்கை தொடர்பாக அரசு அதிகாரிகள் தரப்பில் தாமதமோ அல்லது அலட்சியமோ இருந்தால் அது உடனடியாக சரி செய்யப்படும். சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்தால் அதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தான் முடிவெடுப்பர்’’ என்று கூறியதுடன், அவரது கோரிக்கை குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி உரிய துறை அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.