சென்னையை அடுத்த செங்கல்பட்டில் வாழும் தனது தாயிடம் தவறாக நடந்த முதியவர் ஒருவரை கல்லால் அடித்துக் கொன்றதாக பள்ளிச்சிறுவனை போலீஸார் பிடித்துள்ளனர். தற்போது அந்த சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல் நிலையம் அருகே உள்ள ராமாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் சடலமாக கிடைக்கிறார் என மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போலீஸார், அதே கிராமத்தைச் சார்ந்த 60 வயது முதியவர் கன்னியப்பனின் சடலம் என அடையாளம் கண்டனர். அதே பகுதியில் கன்னியப்பன் விவசாயம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று கன்னியப்பன் தன் விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடினர். இந்த நிலையில், மேல்மருவத்தூர் போலீசார் கன்னியப்பனின் சலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திசை மாறிய வழக்கு
அதில், கூர்மையான ஆயுதத்தால் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் கன்னியப்பன் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியப்பனின் மரணத்தை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- ஆசிரியர் தாக்கியதால் தலித் சிறுவன் உயிரிழப்பா? ராஜஸ்தானில் என்ன நடந்தது?
- பிகாரில் உண்மையில் போலி போலீஸ் ஸ்டேஷன் இயங்கியதா?
முதல் கட்டமாக சொத்து பிரச்னை காரணமாக கன்னியப்பனை அவரது நெருங்கிய உறவினர்களில் யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தைச் சார்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கன்னியப்பனுக்கும் நெருங்கிய உறவு இருந்துள்ளதாகவும் அந்தப் பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொருவருடனும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தாலும் கன்னியப்பன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் புலனாய்வு செய்தனர்.
இதற்கிடையே, ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கன்னியப்பனை கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ராமாபுரம் கிராமத்தின் எல்லையில் காட்டுப்பகுதியில் தனியே ஒரு குடும்பம் வசித்து வந்தது. கன்னியப்பன் அந்த குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று தனது தாயாரை முதியவர் கன்னியப்பன் தரக் குறைவாக பேசியதுடன் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அந்த ஆத்திரத்தில் அந்த சிறுவன் கன்னியப்பனை தாக்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
அந்த சிறுவன் கன்னியப்பனை கல்லால் அடித்துக்கொலை செய்ததாகவும் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் பிரேம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்க சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிபதியின் உத்தரவின்படி அந்த சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :