திருப்பூர்: முறைகேடாக இயக்கப்பட்ட கல்குவாரியில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட கல் குவாரியில், சுமார் 200 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து தொழிலாளி உயிரிழந்தார். கல்குவாரியை முறைகேடாக இயக்க அனுமதி அளித்ததால், இந்தச் சம்பவத்தில், திருப்பூர் மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்: மொரட்டுபாளையம் வெள்ளியம்பாளையத்தில் உரிய அனுமதி இன்றி, கல் குவாரி இயக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இங்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கல்குவாரி உள்ளே சுமார் 200 அடி பள்ளத்தில் லாரி ஒன்று கவிழ்ந்து நொறுங்கிவிட்டது. லாரியில் இருந்த தொழிலாளி தர்மபுரியை சேர்ந்த நாகராஜ் (31) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் உண்மைதான் என கிராம நிர்வாக அலுவலர் உறுதிப்படுத்தினார்.
ஊத்துக்குளி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய 64 கல் குவாரிகளை மூட நீதிபதி மகாதேவன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார். அப்படி மூடப்பட்ட குவாரிகளில் கல்குவாரிகளில் ஒன்று தான் இது. தற்போது ஊத்துக்குளி வட்டத்தில் 7 குவாரிகள் மட்டுமே சட்டப்படி உரிய அனுமதியுடன் இயங்குகிறது.
மொரட்டுபாளையத்தில் அனுமதி பெற்ற 4 குவாரிகளில் ஒரு குவாரியின் அனுமதிக் காலம் முடிந்ததால், 3 குவாரி மட்டுமே சட்டப்படி இயங்கி வருகிறது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது. விதிமுறைக்குப் புறம்பாக குவாரிகளை இயக்க அனுமதித்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.