புதுடெல்லி: பாஜகவின் குஷ்பு சுந்தருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். முன்னாள் கட்சித் தோழி என்பதால் பாராட்டவில்லை, பில்கிஸ் பானு வழக்கில் நியாயத்தின் பக்கம் நின்றுள்ளதாகாக் கூறி பாராட்டியுள்ளார்.
அண்மையில் குஷ்பு ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில் குஷ்பு, “ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மோசமாக தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுதும் நீங்காத ஆன்ம ரணத்தைப் பெற்றிருக்கிறார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் ஈடுபட்ட எந்த ஒரு நபரும் விடுதலையாகக் கூடாது. யாரேனும் அப்படிச் சென்றால் அது மனிதநேயத்திற்கு, பெண்மைக்கு அவமானம். பில்கிஸ் பானு மட்டுமல்ல வேறு எந்தப் பெண்ணாக இருந்தாலும் இந்த விஷயத்தில் கட்சி, கொள்கைகள் தாண்டி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
Hear hear, @khushsundar! Proud to see you standing up for the right thing, rather than the right wing. https://t.co/NPfumMD6DW
— Shashi Tharoor (@ShashiTharoor) August 26, 2022
இதனை சுட்டிக் காட்டிய சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாரிது குஷ்புவா! வலது சாரியாக இல்லாமல் எது சரியோ அதற்கு நிற்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
யார் இந்த பில்கிஸ் பானு? – கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
அவரது விடுதலையை எதிர்த்த மனு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பில்கிஸ் பானுவுக்கு அதரவாக ட்விட்டரில் குரல் கொடுத்தார் குஷ்பு.