புதுடெல்லி: ஆன்லைனில் கடன் வழங்கும் ‘கடன் ஆப்’ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் சில ஆயிரம் ரூபாயை மட்டுமே ஆசைப்பட்டு கடன் பெறும் மக்கள், பிறகு கொள்ளை கொள்ளையாக வசூலிக்கப்படும் வட்டியை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். பணத்தை செலுத்த முடியாதவர்களின் போலி நிர்வாண புகைப்படங்கள் வெளியிடுதல், குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடன் வாங்கிய விவரத்தை தெரிவித்து அவமானப்படுத்துவது போன்ற அட்டூழியங்களில் இவை ஈடுபடுகின்றன. இதனால், ஏராளமானோர் தற்கொலை செய்கின்றனர்.
இந்நிலையில், புகார்களின் அடிப்படையில் இந்தியாவில் கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து, கடந்த ஓராண்டில் மட்டுமே 2 ஆயிரம் கடன் ஆப்ஸ்களை நீக்கி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் சைகத் மித்ரா இதை தெரிவித்துள்ளார். இந்த ஆப்ஸ்களை கடுமையான விதிமுறைகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.