புதுடில்லி: இந்தியாவின் பொது எதிரிகளாக கருதப்படும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவில் காலநிலை இருவேறு விதமாக மோசமான நிலையில் உள்ளது.
நமது அண்டை நாடான சீனாவில் வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயுள்ளன. அங்குள்ள சோங்குயிங் மாகாணத்தின் சில கிராமங்களில், குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 36,700 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் அருகில் உள்ள ஹியுபே மாகாணமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, சில இடங்களில் பயிர்சாகுபடி முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அதீத வெப்பம் காரணமாக சில உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இவ்வாறாக சீனாவின் பெரும்பகுதியில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, நம் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில் அதற்கு நேர் மாறாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பயங்கரமான மழை மற்றும் வெள்ளத்தால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் உள்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு காலநிலை மாற்ற அமைச்சர் ஷெர்ரி ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும், கனமழை காரணமாக இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை 10 லட்சம் கால்நடைகளும் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை இந்த கனமழை மற்றும் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது. ஒருபக்கம் வறட்சியால் சீனாவில் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்களை வாட்டி வதைக்க, மறுபக்கம் வெள்ளத்தால் பாகிஸ்தானில் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்களை வேதனையடைய செய்துள்ளது.
நம் அண்டை நாடுகளாக இருந்தாலும், இவ்விரு நாடுகளும் இந்தியாவின் பொது எதிரிகளாகவும் கருதப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த நாடுகளில் இருவேறு காலநிலைகள் புரட்டிப்போட்டாலும், இந்தியாவில் சீரான பருவநிலையே நிலவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement