பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்… ராகுல் கற்க வேண்டிய பாடம்!

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’… 2014 இல் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது அக்கட்சியின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. பாஜகவை தொண்டர்கள், மத்தியில் மட்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் தாமரை கொடிதான் பறக்க வேண்டும் என்று கட்சியை நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கில் ஒரு கட்சித் தலைவராக அமித் ஷா இப்படி சொன்னதில் தவறொன்றும் இல்லைதான்.

ஆனால் இதற்கு பாஜக கையாண்டு வரும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற வழிமுறைதான் ஜனநாயகத்துக்கே ஆபத்தான அணுகுமுறையாக இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மூன்று உத்திகள்:
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற தமது இலக்கை அடைவதற்காக அக்கட்சியோ அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி தருவது, ஆளும்கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, பதவி ஆசைக்காட்டி அவர்களை தங்கள் பக்கம் இழுப்பது, ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களை டார்கெட் செய்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வருவது போன்ற தந்திர உத்திகளை மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறப்பாக செய்து வருகிறது பாஜக.

முதல் ஆபரேஷன்:
அமித் ஷாவின் ‘அரசியல் சாணக்கியத்தனம்’ என்று வர்ணிக்கப்படும் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் 2016 இல் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேற்றப்பட்டது. அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் அதிருப்தியாளர்களாக மாறி கட்சியில் இருந்து விலகினர். இதன் விளைவாக முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால், அதற்கு கூட உரிய அவகாசம் அளிக்காமல் ஆட்சியை கலைத்தார் மாநில ஆளுநர். ஆளுநரின் இந்த நடவடிக்கை செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி தப்பி பிழைத்தது. அருணாச்சல பிரதேச மாநிலத்திலும் இதேபோன்றகொரு தீர்ப்பை நீதிமன்றம் அளித்தபோது, அடுத்த ஆக்ஷனாக காஙகிரஸ் எம்எல்ஏக்கள் பெரும்பாலோரை தன் பக்கம் இழுத்து கொண்டது பாஜக.

உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசத்தில் செயல்படுத்திய ஆபரேஷன் லோட்டஸ் வழிமுறையை பின்பற்றி மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டிய பாஜக, கர்நாடகத்திலும் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கும் முடிவுரை எழுதியது.

அடுத்த குறி:
அடுத்து மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சியான சிவசேனாவையே இரண்டாக உடைத்து, உத்தவ் தாக்கரேவை முதல்வர் பொறுப்பில் இருந்த தூக்கி எறிந்துவிட்டு, அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவனான ஏக்நாத் ஷிண்டே முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகுப் பார்த்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியையும் ஒருவழி ஆக்கிவிட வேண்டியதுதான் என்று பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இப்படி அனைத்து மாநிலங்களிலும் ஒன்று தாம் ஆள வேண்டும்…. இல்லையென்றால் ஆளும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை உண்டு, இல்லை என செய்துவிட வேண்டும் என்ற பாஜகவின் அரசியல் நேர்மறையற்ற அணுதுமுறை தேர்தல் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது என்பதுடன், மக்களாட்சி தத்துவத்துக்கே ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ராகுல் கற்க வேண்டிய பாடம்:
இவ்வாறு எவ்வளவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அரசியலில் வெற்றிப் பெற்றவர்களே கொண்டாடப்படுவார்கள் என்பதும், அந்த வெற்றி எந்த வழியில் பெறப்படுகிறது என்பதை பற்றியெல்லாம் தற்கால அரசியல்வாதிகள் கருத்தில் கொள்வதில்லை என்பதும்தான் யதார்த்தம். இந்த யதார்த்தை உணர்ந்து பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸை முறியடிப்பதில்தான் காங்கிரசின் எதிர்காலம் அடங்கி உள்ளது. பிகாரில் நிதீஷ் குமார், ராஜஸ்தானில் அசோக் கெலாட் என ஆபரேஷன் லோட்டஸை முறியடித்த சீனியர்களிடம் இதற்கான பாடத்தை ராகுல் முதலில் கற்க வேண்டியது அவசியம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.