தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்து சென்றவர் இயக்குநர் பாரதிராஜா. கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தமிழ் திரையை புரட்டி போட்டது. அந்தப் படம் வந்த பிறகுதான் பலருக்கும் இயக்குநராகலாம் என்ற நம்பிக்கையும், எண்ணமும் தோன்றியது. அதனையடுத்து பலரும் சினிமா ஆசையோடு தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வண்டி ஏறினர். பாரதிராஜா தொடர்ந்து இயக்கிய பல படங்களும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை. அவரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநரான பாக்யராஜ், மணிவண்ணன் போன்றோர் இன்றளவும் பலரால் கொண்டாடப்படுகின்றனர்.
ராதிகா, ராதா, ரேவதி உள்ளிட்ட முன்னணி நடிகைகளை பாரதிராஜா அறிமுகப்படுத்தியவர். இயக்குநராக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்திவருகிறார் பாரதிராஜா. அந்தவகையில், பாண்டியநாடு, திருச்சிற்றம்பலம், ராக்கி உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது. அவர் தனது முதல் படமான 16 வயதினிலே படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்த நாளான ஜூலை 17ஆம் தேதியை தனது பிறந்தநாள் என பல ஆண்டுகளாக கொண்டாடிவருகிறார். ஆனால் அவரது பிறந்தநாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆகும்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளான கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்த அவர் சிகிச்சைக்காக தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென கூறி வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் நலம் விசாரித்தனர். நடிகை ராதிகா பாரதிராஜாவுக்காக பிரார்த்தனையும் செய்தார்.
பாரதிராஜா
மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லைசின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை
ஆண்டு வருவார்— வைரமுத்து (@Vairamuthu) August 24, 2022
இச்சூழலில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை இன்னும் சீரடையாததால் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் மேல் சிகிச்சைக்காக தி.நகர் மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட இருக்கிறார்.
மேலும் படிக்க | அவர் அடிச்ச 10 பேருமே டான்தான்…! – பீனிக்ஸ் மனிதர் விஜயகாந்த் பிறந்த நாள்!