புதுடெல்லி: பிஹாரில் புத்த கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். இங்குள்ள புத்தர் கோயில் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. அதேசமயம், இதன் அருகில் இந்துக்களின் விஷ்ணு பாதம் என்ற கோயிலும் உள்ளது.
பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகி, மீண்டும் முதல்வரான பிறகு கடந்த திங்கட்கிழமை இக்கோயிலுக்கு வருகை தந்தார். அவரது அமைச்சரவை சகாவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவருமான முகம்மது இஸ்ரேல் மன்சூரியும் அப்போது முதல்வருடன் இருந்தார்.
இக்கோயிலில் இந்துக்கள் தவிர மற்ற மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கான அறிவிப்பு பலகையும் கோயிலின் வெளியே வைக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல் அமைச்சர் மன்சூரி கோயிலின் கருவறை வரைவந்ததாக கோயில் நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்தனர். பிறகு கருவறையை புனிதப்படுத்துவதாகக் கூறி சுத்தம் செய்னர்.
இந்நிலையில் அமைச்சர் மன்சூரி மீது அருகிலுள்ள முசாபர்பூரின் சமூக சேவகரும் பாஜக ஆதரவாளருமான சந்திர கிஷோர் பராசர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இப்புகார் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அமைச்சர் மன்சூரி மீது புகார் பதிவுசெய்யக் கோரி நீதிமன்றத்தை சந்திர கிஷோர் அணுகியுள்ளார். இவரது மனுவை ஏற்றுக்கொண்ட முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 2-ல் விசாரிக்க உள்ளது.
சந்திர கிஷோர் தனது மனுவில்அமைச்சர் மன்சூரி, கோயிலில் நுழைந்து இந்து மதத்தை அவமதித்துவிட்டதாகவும் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதனிடையே இப்பிரச்சினை பாஜக மற்றும் ஆளும் கூட்டணி தலைவர்கள் இடையிலான மோதலாகவும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக கருத்துகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன. அமைச்சர் மன்சூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக போராட்டம் நடத்தவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பிஹார் பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்கூர் கூறும்போது, “விஷ்ணு பாதம் கோயிலுக்குள் மற்ற மதத்தினர் நுழையக் கூடாது என்பதை முதல்வர் நிதிஷ்குமார் நன்கு அறிவார்.இதையும் மீறி அவர் தன்னுடன் முஸ்லிம் அமைச்சரை உள்ளேஅழைத்துச் சென்றது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் மன்சூரியை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.
புத்த கயாவின் விஷ்ணு பாதம் கோயிலைப் போல வட மாநிலங்களில் முக்கிய பழம்பெரும் கோயில்கள் பலவற்றில் ‘இந்துக்கள் அல்லாதவர் உள்ளே நுழையக்கூடாது’ எனும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும் அமைச்சர்மன்சூரை போல், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தங்கள் நிர்வாகப் பணிகளுக்காக கோயிலுக்குள் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் இதை குறிப்பிடும் வகையில், “பாஜக உடனான கூட்டணி ஆட்சியில் என்னுடன் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஷாநவாஸ் உசைன் கூட பலமுறை கோயிலுக்குள் வந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.