புதிய திட்டங்களுக்காக விவசாய நிலங்களை எடுப்பது தவிர்க்க முடியாதது: அமைச்சர் எ.வ.வேலு கருத்து

சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான அரசின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் அதிகமான இழப்பீடு தரவேண்டும் என்று கேட்டனர் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசு சார்பில் நிலங்கள் எடுக்கும் முதல்கட்ட பணியில் இறங்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நானும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள், மற்றும் விவசாயிகளை நேரடியாக அழைத்து பேசினோம்.

அதில் பெரும்பான்மையானவர்களின் கருத்து எங்களுடைய நிலத்தை எடுக்குகிறீர்களே, அரசு வழிகாட்டுதலின்படி எங்களுக்கு அதிகமான தொகை தேவை என்றுதான் கூறினார்கள். அதேபோல், நிலம் கொடுக்கிற எங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்று கூறினார்கள்.

ஏகநாதபுரம் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு ஊர்களில் இருப்பவர்கள் விமான ஓடுபாதையை மாற்றியமைக்க முடியுமா, அவ்வாறு மாற்றியமைத்தால், ஒரு 500 வீடுகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுமே என்ற கருத்தையும் கூறினார்கள். அதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என்று அங்கேயே பதிலளித்தோம்.

அன்று பெரும்பாலனவர்கள் கூடுதல் இழப்பீடு மற்றும் வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றுதான் நேரடியாக கருத்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில்தான் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

எங்கு சென்றாலும், இதுபோன்ற திட்டங்களுக்கு விவசாய நிலங்களை எடுப்பதை தவிர வேறு வழியே இல்லை. சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அந்நிய செலவாணியை அதிகமாக ஈட்ட முடியும் என்று பலரும் கருதுகின்றனர். இந்த நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கட்டுப்பாடு 2029-ம் ஆண்டுடன் முடிந்துவிடுகிறது. அதற்குமேல் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

அண்டை மாநிலங்களான பெங்களூரு மற்றும் ஹைதராப்த்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அவைகளின் வளர்ச்சி கூடுதாலாகி கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் பெங்களூரின் மையத்தில் இருந்த விமான நிலையம், தற்போது 75 கி.மீட்டருக்கு வெளியே அமைந்துள்ளது. மும்பையில் இரண்டாவது விமான நிலையம் தயாராகி வருகிறது. இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கு இன்னொரு விமான நிலையம் தேவைப்படுகிறது.

உடனடியாக பரந்தூரை தேர்வு செய்யவில்லை. புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 11 இடங்களைப் பார்த்தோம். இறுதியாக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. படாளம், பன்னூர், திருப்போரூர் மற்றும் பரந்தூர். இறுதியாக பரந்தூரில் அமைக்கலாம் என்று அரசு முடிவு செய்தது.

படாளம் மற்றும் திருப்போரூர் அருகே கல்பாக்கம் அனல்மின் நிலையம் இருப்பதாலும், பன்னூரில் அதிகப்படியான குடியிருப்புகள் இருந்ததாலும் அந்த இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதன் அடிப்படையில்தான், பரந்தூரில் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்து தேர்வு செய்தோம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.