புதுக்கட்சி தொடங்குகிறார் குலாம் நபி ஆசாத்? – காஷ்மீர் தேர்தலுக்கு ஆயத்தம்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ள குலாம் நபி ஆசாத், விரைவில், புதுக்கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தை ஜம்மு – காஷ்மீர் பிரசார குழு தலைவராக கட்சியின் தலைமை நியமித்தது. கட்சித் தலைமை அறிவித்த சில மணி நேரத்தில் தனது தலைவர் மற்றும் மாநில விவகாரக் குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த அவர், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக உள்ளார் எனவும், காங்கிரஸ் கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது அவரது உதவியாளர்களால் தான் எடுக்கப்படுகிறது எனவும் குலாம் நபி ஆசாத் விமர்சித்தார்.

இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலும், தனது சொந்த மண்ணில் கட்சியைத் தொடங்க விரும்புவதாகக் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.