புதுச்சேரி: “புதுச்சேரியில் தியாகிகளுக்கு ரூ.1000 பென்ஷன் உயர்த்தி வழங்கப்படும்; மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியது: ‘‘நிதிலை அறிக்கையில் நம்முடைய நிதி ஆதாரம் என்ன, கடன் எவ்வளவு பெறப்போகிறோம், எவ்வளவு செலவு செய்துள்ளோம் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக சொல்லியுள்ளோம். இதில் எந்த மறைவும் இல்லை. இருக்கின்ற வருவாயை கொண்டு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த முடியுமா? இலவச திட்டங்களை கொடுக்க முடியுமா? என்று அனைவருக்கும் சந்தேகம் இருக்கின்றது. நிச்சயமாக நம்முடைய அரசு எல்லாத்திட்டங்களையும் செயல்படுத்தும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உறுதுணையோடு புதுச்சேரி மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப்படும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அரசு மானியம் கொடுக்கிறது. 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மானியம் இல்லை என்ற சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகம் தேவையில்லாத ஒன்று. அரசு நிதியுதவி பெறும் பள்ளி என்று சொன்னால் அங்கு படிக்கின்ற 11, 12-ம் வகுப்புகளையும் சேர்த்ததுதான். மருத்துவ காப்பீடு திட்டம் முழுமையாக புதுச்சேரி மக்களுக்கு கிடைக்கும். பணிகளை விரைந்து முடிப்பதிலும் நிறைய காலதாமதமாகிறது. இதனை நாம் மறுக்க முடியாது. இதிலுள்ள உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நம்முடைய குடியரசுத் தலைவர் கூட ஐஏஎஸ் அதிகாரிகள் மக்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு விரைவாக செயலாற்ற வேண்டும் என்று இன்று பேசியுள்ளார். இதனை நான் இங்கே கோடிட்டு காட்ட விரும்புகின்றேன். எம்எல்ஏக்கள் மக்களுடைய மனநிலைக்கு ஏற்பத்தான் இங்கு செயல்படுகின்றனர். அவர்களின் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கின்றனர். ஆதலால் அரசு செயலர்கள் எல்லோரும் மக்களுடைய மனநிலையை அறிந்து விரைவாக செயலாற்ற வேண்டும். வங்கிகளில் ஹட்கோ, நபார்டு வங்கிகளில் கடன் வாங்க செல்லும்போது காலதாமதம் ஏற்படுகிறது. அதுபோன்ற நிலைகள் இல்லாமல் விரைவாக செயலாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அப்படி இருந்தால் எம்எல்ஏக்கள் இங்கே எழுப்பும் கேள்விகள், குறைகள் மிக மிக குறைவாக இருக்கும்.
கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்கிறது. அதற்கான நிதியும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பென்ஷன் ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும். தற்போதுள்ள 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி ரூ.2 ஆயிரம் கோடி நமக்கு அவசியம் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளேன். குறைந்தது ரூ.800 கோடி தேவை என்றும் கூறியுள்ளேன். அந்த நிதியை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். கடனை விரைவாக பெற்று செலவிடுவதில் அரசு அக்கறை கொள்ளும். மாநில அரசின் கடன் தொகை ரூ.10 ஆயிரம் கோடி அளவில் மிகவும் உயர்ந்துள்ளது.
கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதுவும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. 5 ஆண்டுகள் அசல், வட்டி செலுத்தாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் கடனை தள்ளுபடி செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்று முதல்வர் ரங்கசாமி பேசினார்.