திருவனந்தபுரம்: பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமியையும், அவரது தம்பியையும் பலமுறை பலாத்காரம் செய்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பாஸ்டருக்கு மஞ்சேரி நீதிமன்றம் ஆயுள்கால சிறையும், ₹ 2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் பிரகாஷ் (53). அங்குள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக உள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது ஒரு குடும்பத்துடன் பாஸ்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், அவரது 12 வயதான தம்பிக்கும் பேய் பிடித்து இருப்பதாகவும், அதை விரட்டாவிட்டால் பெரிய பிரச்னைகள் ஏற்படும் என்றும் பாஸ்டர் கூறியுள்ளார். அதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பேயை விரட்டுவதாக கூறி அவர்களது வீட்டுக்கு சென்றார் பாஸ்டர் ஜோஸ் பிரகாஷ். அப்போது சிறுமியையும், சிறுவனையும் பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார். இதை 2 பேரும் பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்டர் ஜோஸ் பிரகாஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு மஞ்சேரி அதிவிரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாஸ்டர் ஜோஸ் பிரகாஷை அவரது ஆயுள்காலம் முழுவதும் சிறையில் அடைக்கவும், ₹2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.