நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக முச்சக்கரவண்டிகளை இரத்திரனியல் மயப்படுத்தல் Electrification மற்றும் மின்சார முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதற்கான ; முன்னோடித் திட்டம் குறுகிய கால தீர்வாக அமையும் என்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திரு எஸ்.எம்.டி.எல்.கே அல்விஸ் தெரிவித்தார்.
மின்சார முச்சக்கர வண்டிகள் இறக்குமதி மற்றும் தற்போதுள்ள முச்சக்கரவண்டிகள மின்மயமாக்கலுக்கான Electrification முன்னோடித் திட்டம் தொடர்பாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக முன்னோடித் திட்டமாக இது மேற்கொள்ளப்படுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் தற்போது 22 மில்லியன் மக்களின் போக்குவரத்துக்காக சுமார் 8.4 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் சுமார் 14 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் உள்ளன, அவற்றில் முச்சக்கர வண்டிகள் மூலம் நேரடி வேலைவாய்பு என்ற ரீதியில் 05 இலட்சம் முச்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், பகுதி நேர வேலைவாய்ப்பாக ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று இலட்சமாகும்.
இதன் காரணமாக இத்துறையில் அதிக அளவு எரிபொருள் செலவிடப்படுவதுடன் ,இதற்காக பெருந்தொகை அந்நியச் செலாவணியும் செலவாகிறது. ஒரு நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு போக்குவரத்து மிகவும் முக்கியமான காரணியாகும். அதற்கமைய அரசாங்கம் பொது போக்குவரத்திற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது முக்கியமாகும்
எரிபொருள் பயன்பாட்டினால் காற்று மாசடைவது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பிரச்னைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்க சில முறையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திரு எஸ்.எம்.டி.எல்.கே அல்விஸ் மேலும் தெரிவித்தார்.