புதுடெல்லி; கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தாண்டில் மட்டும் 2,000 லோன் ஆப்ஸ் நீக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார். இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் இந்தப் போலி கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல், மன நிம்மதி இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில் கூகுள் மூத்த இயக்குனர் சைகத் மித்ரா அளித்த பேட்டியில், ‘கூகுளின் விதிகளை மீறுதல், தவறான தகவல்களை வெளியிடுதல் போன்ற காரணங்களுக்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட லோன் ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளன. லோன் ஆப்ஸ் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதனை கடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விதிகளை மேலும் கடுமையாக்குவது குறித்தும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
ஆன்லைன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இணைய பாதுகாப்பு கூட்டங்கள் நடத்தப்படும். அதற்காக 1,00,000 டெவலப்பர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 16 கோடி மானியமாக வழங்கப்படும். இந்த நடவடிக்கைகளால் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலுவான பாதுகாப்பை வழங்க முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக நடத்துவதற்காக பல்வேறு மொழிகளில் விழிப்புணர்வு திட்டத்தையும் கூகுள் தொடங்கியுள்ளது’ என்றார்.