மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதுமான ‘பார்க்கிங்’ வசதியில்லாததால் தினமும் நோயாளிகளுடன் வரும் பொதுமக்களுக்கும், ‘நோ பார்க்கிங்’-ஐ கண்காணிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதனால், மல்டிலெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 10 ஆயிரம் வெளி நோயாளிகள், 3,500 உள் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்து செல்கிறார்கள். ஆனால், மருத்துவமனை வளாகத்தில் முறையான ‘பார்க்கிங்’ வசதியில்லை. நோயாளிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காகே சில குறுகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நடைபாதைகள், சிகிச்சைப்பிரிவு கட்டிட வளாகங்கள் முன் நோயாளிகள் வாகனங்களை ‘பார்க்கிங்’ செய்ய முடியாத அளவிற்கு அந்த இடங்கள் முன் கயிறு கட்டி மருத்துமவனை செக்யூரிட்டி ஊழியர்கள் கண்காணிக்கிறார்கள். இவர்கள் தனியார் ஏஜென்சி மூலம் பணியமர்த்தப்பட்டு ஊதியம் பெறுகிறார்கள். இவர்கள் நோயாளிகள், அவர்களுடன் வரும் உறவினர்கள், வார்டுகளுக்கு பார்வையாளர்கள் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துகிறார்களா என்று கண்காணித்து அவர்களை ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளுக்கு விரட்டி விடுவார்கள்.
ஆனால், மருத்துவமனை வளாகத்தில் குறுகிய இடங்களில் ஆங்காங்கே சில பார்க்கிங் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஏற்கெனவே வாகனங்களை வெளியே எடுக்க முடியாத அளவிற்கு வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், வாகனங்களை நோயாளிகள், பார்வையாளர்கள் வெளியே நிறுத்தினால் மருத்துவமனை செக்யூரிட்டி ஊழியர்கள் வந்து அவர்களை திட்டுவார்கள். அதனால், நோயாளிகளுக்கும், மருத்துவமனை செக்யூரிட்டி ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
இன்றுகூட நோயாளியை பார்க்க வந்த பார்வையாளர் ஒருவர் சீமாங் கட்டிடம் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது அங்கு வந்த செக்யூரிட்டி ஊழியர், 65 வயது மதிக்கதக்க அந்த பார்வையாளரை அவரது வயதை கூட மதிக்காமல் ‘பளார்’ அறைவிட்டார். ஆவேசமடைந்த அந்த வயதானரும் பதிலுக்கு அந்த ஊழியர் கண்ணத்தில் பளார் அறைவிட்டார். இருவரும் ஒருவர் சட்டையை மற்றொருவர் பிடிக்க அந்த இடத்தில் பெருங்கூட்டம் கூடியது.
சம்பவம் நடந்த இடம் அருகே மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன் இருந்தும், அங்கு இருந்து ஒரு போலீஸார் கூட வரவில்லை. மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்கவும், பாதுகாப்பு கொடுக்கவுமே போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை போலீஸார் மாற்றுப்பணிகளுக்கு டெப்டேஷன் செல்வதால் மருத்துவமனை பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவதே இல்லை.
விபத்து, குற்ற வழக்களில் சிகிச்சைக்கு வருவோர், விபத்துகளில் இறப்போர் தகவல்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கும் வேலைகளை மட்டுமே பார்க்கிறார். அதனால், மருத்துவமனை வளாகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. பார்க்கிங் பிரச்சினையால் விபரீத நிகழ்வுகள் ஏற்படும் முன், நோயாளிகள், பார்வையாளர்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.