அவுரையா: உத்தரபிரதேசத்தில் மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரையாவை சேர்ந்த உரக்கடை உரிமையாளர் சந்தீப் போர்வால் (52), அவரது மனைவி மீரா போர்வால் (48) மகன் சிவம் போர்வால் (26) ஆகிய மூன்று பேரும் தங்களது மேல்மாடியில் இருந்தனர்.
நீண்ட நேரமாகியும் வீட்டிற்குள் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். இச்சம்பவம் குறித்து அவுரையா ஏடிஎஸ்பி சிஷ்யா பால் கூறுகையில், ‘துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த மூவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
முதற்கட்ட விசாரணையில் சந்தீப் போர்வால் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தி, தனது மனைவியையும், மகனையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது போன்று தெரிகிறது. சம்பவ இடத்தில் சந்தீப் போர்வாலின் கையில் துப்பாக்கி இருந்தது. வீட்டில் இருந்து சில தோட்டாக்களை மீட்டுள்ளோம். சந்தீப் போர்வாலின் இளைய மகன், சம்பவம் நடந்தபோது தரை தளத்தில் இருந்துள்ளார்.
அவர் தனது லேப்டாப்பில் ஹெட்ஃபோன்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். அதனால், மேல்மாடியில் நடந்த துப்பாக்கிச் சூடுச் சத்தம் அவருக்கு கேட்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.