திருப்பதி: திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் 2 நாட்கள் நடைபெற உள்ள தேசிய தொழிலாளர் நல மாநாட்டை நேற்று மத்திய சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர் நலம், மற்றும் ஊரக வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வளர்ச்சி பெற்ற, வலிமை பெற்ற நாடாக நம் நாடு உருவாவதில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆதலால்தான் இவர்களுக்காக பிரதமர் ஸ்ரம-யோகி மந்தன் யோஜனா, சுரக் ஷ பீமா யோஜனா, ஜீவனஜோதி பீமா யோஜனா போன்ற பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள் அமலில் உள்ளன.
கரோனா காலகட்டத்தில் 1.5 கோடி தொழிலாளர்கள் ஒருஅரண் போல நின்றனர். நாட்டில் வளர்ச்சிக்கும் இவர்களின் பங்குமிக முக்கியம். தொழிலாளர்களின் நலனை காக்க இ-ஸ்ரமா எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், ஒரே ஆண்டில் மட்டும் 400 பிராந்தியங்களில் இருந்து 28 கோடி தொழிலாளர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இது முக்கியமாக, கட்டிட கூலி தொழிலாளர்கள், ஊர் விட்டு ஊர் செல்லும் தொழிலாளர்கள் அதிகம் பயனடைகின்றனர். இதில், மாநில தொழிலாளர் இணையத்தையும் இணைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக தொழிலாளர் சட்டத்தில் உள்ள அடிமைத் தனத்தை ஒழிக்க மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.