டாக்கா: வங்கதேசத்தில் அகதி முகாம்களில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று இனப்படுகொலை நினைவு நாள் அனுசரித்தனர்.
மியான்மரின் சிறுபான்மையின மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள், மேற்கில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் அதிகளவில் வசித்து வந்தனர். இவர்களில் சிலர் கடந்த 2012 முதல், பவுத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மர் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ராக்கைன் போலீஸ் நிலையங்கள் மீது நடந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். அதனால் கடும் கோபம் கொண்ட மியான்மர் ராணுவம் கிளர்ச்சியாளர்களை முற்றிலும் ஒடுக்கும் நோக்குடன் கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் ராக்கைன் பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டனர்.
மியான்மர் ராணுவத்தின் இனப்படுகொலைக்கு அஞ்சி 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் போதிய வசதிகள் அற்ற மற்றும் வெள்ள அபாயம் கொண்ட முகாம்களில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேசத்தில் அகதி முகாம்களில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் நேற்று இனப்படுகொலை நினைவு நாள் அனுசரித்தனர். இதையொட்டி பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி இவர்கள் பேரணி சென்றனர். தங்களின் சொந்த மாநிலமான ராக்கைனில் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர். இந்தியாவிலும் டெல்லி உட்பட பல மாநிலங்களில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.